அமித்ஷா பதவி விலகுவாரா? மக்களவையில் வெளுத்து வாங்கிய பிரியங்கா காந்தி !
பஹல்காம் தாக்குதல் உளவு துறையின் தோல்வியையே காட்டுகிறது என எம்.பி. பிரியங்கா காந்தி, மக்களவையில் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தினர். இதையடுத்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விரிவாக விவாதம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி நேற்று விளக்கம் அளித்து பேசினார்.
இந்நிலையில், இன்று மக்களவையில் பஹல்காம் தாக்குதல் விவகாரம் பற்றி பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது என மத்திய அரசு கூறியது. இதனை நம்பி சுற்றுலா சென்றவர்கள் உயிரிழந்து உள்ளனர். பாதுகாப்பு குறைபாடே இதற்கு காரணம். பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது ஒரு வீரர் கூட இல்லாதது ஏன்? இதனை தடுக்க தவறியது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
பஹல்காம் தாக்குதல் நேரத்தில் அங்கு பாதுகாப்பு படையினர் ஏன் இல்லை?ஒரு மணிநேரம் தாக்குதல் நடந்தது – அதற்குள் எப்படி எதிர்வினை தர முடியவில்லை?2020க்கு பிறகு 25 தாக்குதல்கள் நடந்துள்ளன – இதற்கு யார் பொறுப்பு?காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உள்துறை மந்திரி பதவி விலகியதுபோல், இப்போது அமித்ஷா பதவி விலகுவாரா?இந்தியா மக்களைக் காக்க மத்திய அரசு செயல்படுகிறதா, விளம்பர அரசியலுக்கு மட்டுமா?
தொடர்ந்து அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, போர் நிறுத்தம் செயல்பாட்டுக்கு வர யார் காரணம்? என தெளிவுப்படுத்த வேண்டும். வேறொரு நாடு கூறி போரை நிறுத்தியது என்பது இதுவே முதல்முறை. நாட்டுக்கு இது அவமானம் என்று அவர் பேசியுள்ளார்.