மேல்படிப்புக்கான 10% இட ஒதுக்கீடு எங்கே? முன்னாள் MLA கேள்வி!

Loading

புதுவை மாநிலத்தில் அரசு பள்ளியில் 1 முதல் 12 வரை படித்த மாணவ மாணவிகளுக்கு மேல்படிப்புக்கான 10% இட ஒதுக்கீடு எங்கே? என முன்னாள் MLA ஓம்சக்தி சேகர் புதுச்சேரி அரசை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் -ஓம்சக்தி சேகர்வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:புதுவை மாநிலத்தில் அரசு பள்ளியில் 1 முதல் 12 வரை படித்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் இதர படிப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் ஆணை இதுவரை புதுச்சேரி அரசால் அறிவிக்கப்படாத நிலையில். எப்போது இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதுபோன்ற சூழலில் தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் சென்டாக் தரவரிசை பட்டியல் புதுவை மக்களை கவலை அடைய செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 52 இடங்களில் தற்போது 23 இடங்கள் மட்டுமே நிரப்ப முடியும் ஏனெனில் 23 மாணவ மாணவிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர் என்ற அறிவிப்பு புதுச்சேரி மக்களை கவலை அடைய செய்துள்ளது. இதனால் புதுச்சேரி மாணவர்கள் அதுவும் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வியை பயில வேண்டும் என்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை உரிய பலனை அளிக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சியினை அந்தப் பள்ளி மாணவனின் முக்கியமான பாடமாக 11 ஆம் வகுப்பு அட்மிஷன் செய்யும் போதே பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அதற்காக உரிய தொகையையும் அவர்களிடம் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் அது போன்ற வாய்ப்புகள் ஏற்படாத சூழல் நிலவுகிறது. CBSE பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் மாணவர்கள் நீட் தேர்வில் உரிய மதிப்பெண் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வுக்கு என அதற்காக பயிற்சி அளிக்க பொறுப்பாசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் நியமனம் செய்யப்பட்டு அதற்கு தனிபயிற்சி அளிக்கப்பட வேண்டும். 11 ஆம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு நீட் பயிற்சியினை அளிக்கபுதுச்சேரி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் 1 முதல் 12 வரை படித்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஒதுக்கீடு வழங்கப்படுவதால் முழு சீட்டுகளையும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பாக 6 முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களையும் இட ஒதுக்கீட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறும்.

உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கையும் நல்ல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதும் கடும் போட்டி நிறைந்த இந்த உலகத்தில் புதுச்சேரி முதல்வர் அவர்களும் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் உடனடியாக உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தி எதிர்வரும் கல்வி ஆண்டுகளில் புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களை முழுமையாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் -ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.

0Shares