பங்கு வர்த்தக ஆசைக்காட்டி மூதாட்டியிடம் ரூ.7.87 கோடி அபேஸ்.. சைபர் மோசடி கும்பல் தொடர் அட்டுழியம்!
மும்பையில் 62 வயது மூதாட்டியிடம் சைபர் மோசடி கும்பல் ரூ.7 கோடியே 87 லட்சம் பறித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மோசடியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை பாலிஹில் பகுதியில் வசிக்கும் அந்த மூதாட்டியை, பிரபல பங்கு வர்த்தக நிறுவனத்தில் இருந்து அழைக்கிறேன் என கூறி பிரியா சர்மா என்ற பெண் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டார். ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி, ஒரு வாட்ஸ்அப் குழுவில் மூதாட்டியை இணைத்தார்.
அந்த குழுவில் இருந்த பலர் தாங்கள் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் லாபம் சம்பாதித்ததாக கூறி நம்ப வைத்தனர். இதனால் மூதாட்டி, பிரியா சர்மா பரிந்துரைத்த செயலியை (App) தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.7.87 கோடி வரை அனுப்பி முதலீடு செய்தார்.
பின்னர் அந்த செயலியில் அதிக லாபம் வந்ததாக காட்டப்பட்டதால், மூதாட்டி அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார். ஆனால் பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. பிரபல பங்கு வர்த்தக நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, அவரின் பெயரில் எந்த முதலீடும் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.