கோவில் தேர் செய்ய மரம் கேட்டு தமிழக அமைச்சரிடம் எதிர்கட்சித் தலைவர் மனு!
வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் செய்ய தமிழக வனத்துறை அமைச்சரிடம் மரம் கேட்டு எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் மனு அளித்தார்,
புதுச்சேரியின் வளர்ந்து வரும் நகரமான வில்லியனூரில் புகழ்பெற்ற பெரிய கோவில் என அழைக்கப்படும் கோகிலாம்பிகை சமேத திருக்காமேஸ்வரர் கோவில் உள்ளது. தர்மபால சோழ மன்னரால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் மிகவும் பிரசித்திபெற்ற தலமாகும்.
தென்னக சிவாலயங்களில் பிரசித்தி பெற்றதுமாக விளங்கும் கோகிலாம்பிகை சமேத திருக்காமேஸ்வரர் கோவிலில் உள்ள தேர் மிகவும் பழமையானதால், வல்லுநர் குழு ஆய்வு செய்து புதிய தேர் செய்வதற்கான ஒப்புதல் வழங்கினர். இதையடுத்து மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி வழிகாட்டுதல்படி, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்களின் சீரிய முயற்சியால் கோவில் நிர்வாகம், தேர் கமிட்டி, ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் வல்லுநர் குழு உதவியுடன் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் புதிய அமைப்பதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் புதிய தேர் செய்வதற்கான மரம் புதுச்சேரி அரசிடம் இல்லாததால், தமிழகத்தில் இருந்து மரங்களை கொண்டு வந்து புதிய தேர் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் தலைமையில், மாண்புமிகு தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களை, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள, முகாம் அலுவலகத்தில் கோவில் நிர்வாககள் மற்றும் ஊர் பொதுமக்கள் சந்தித்து தேர் செய்வதற்கான மரம் வழங்கி உதவுமாறு கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாண்புமிகு அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள், தங்களது கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்கள்.
இந்த சந்திப்பின்போது திருக்காமேஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரி திருகாமேஸ்வரன், உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் சக்திவேல், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் நித்தீஷ், சமூக சேவகர் கலைமணி, கிளைச் செயலாளர் மிலிட்டரி முருகன், கார்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.