முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி..முன்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் பிரதாப் அழைப்பு!
திருவள்ளூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்டம் சார்பாக 2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 53 வகையான விளையாட்டு போட்டிகளும் மற்றும் மண்டல அளவில் 14 வகையான போட்டிகளும் மொத்தம் 67 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
மேலும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 22.08.2025 முதல் 12.09.2025 வரை நடத்தப்பட உள்ளது. மேலும், மாவட்ட மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.1 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ. 2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.1 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் 01.01.2007 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்காள இருக்க வேண்டும் ( U- 19), கல்லூரியில் பயிலும் மாணவ/ மாணவியர்கள், 01.07.2000 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் (U-25) ,15 வயது முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் (வயது வரம்பு இல்லை) மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களான நிரந்தரப் பணியாளர்களுக்கு என 5 பிரிவிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான https://cmtrophy.sdat.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திடலாம்.
மேலும் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டரங்க அலுவலகத்திலோ அல்லது 9514000777 ஆடுகளம் என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.