நிலத்தை அபகரிக்க முயற்சி..தனி நபர் மீது பெண் பரபரப்பு புகார்!
தங்களுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க நினைக்கும் சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் உள்ளிட்ட சில நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பெண் ஒருவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த மோசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராணி, இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் தனிப்பட்ட காழ்புணர்ச்சி காரணமாக ராணிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் வழியாக செல்கின்ற சாலையை விரிவாக்கம் செய்வதாக தெரிவித்து ராணிக்கு சொந்தமான பட்டா இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை தட்டிக் கேட்க சென்றால் ராணி மற்றும் அவரது மகன் ஜீவானந்தம் ஆகிய இருவரையும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்து உங்களால் என்ன செய்ய முடியும் செய்து கொள்ளுங்கள் எனவும் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளும் கவனிக்க வேண்டியதை கவனித்து விட்டேன் இனி நீங்கள் எங்கு சென்றாலும் ஒன்றும் செய்ய முடியாது என அடாவடியாக பேசியுள்ளார்.
எனவே தற்போது தங்களுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க நினைக்கும் சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் உள்ளிட்ட சில நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்த போதிலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கி வருவதாக கூறப்படுகிறது.
எனவே மாவட்ட ஆட்சியர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நபர்களிடமிருந்து மீட்டு தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையாக தெரிவித்துள்ளனர்.