அண்ணா அறிவாலய கதவை தட்டிய அன்வர் ராஜா…அதிமுகவில் இருந்து தூக்கி எரிந்த எடப்பாடி பழனிசாமி!
இன்று திமுகவில் இணைய அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற அன்வர் ராஜாவை, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா மீண்டும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா, எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாள்முதல் அதிமுகவுடன் இணைந்து செயல்பட்டு வந்தவர். 1986-ல் மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுகவில் குறிப்பிடத்தக்க தலைவராக உயர்ந்தார். பின்னர் எம்ஜிஆரால் அதிமுகவின் 15 பேர் கொண்ட ஆட்சிமன்றக் குழுவில் இணைக்கப்பட்டவர்.
1990-களில் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுக்கொண்டு அதிமுகவுடன் தொடர்ந்த அன்வர் ராஜா, 2001-ல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார். 2014-ல் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
ஆனால், சசிகலாவுக்கு திறந்த ஆதரவு தெரிவித்ததும், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததும் காரணமாக 2021-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 2023 ஆகஸ்டில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
சமீபத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியை அவர் எதிர்த்ததாகவும், சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று திமுகவில் இணைய அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற அன்வர் ராஜாவை, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.