தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு..காரணம் என்ன? பரபரக்கும் அரசியல் களம்!
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை விஜய் அறிமுகம் செய்வார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் வியூகங்கள் என அரசியல் கட்சிகள் பரபரப்பாக உள்ளன. அந்த வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அனைத்து தொகுதிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என நியமித்துள்ள தவெக, தொடர்ந்து அடுத்தக் கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது
இந்தநிலையில் அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு 25-ந்தேதி மதுரையில் கட்சியின் 2-வது மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து விஜய் பேச இருக்கிறார்.இதற்கிடையே, மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் விஜய் கலந்துரையாட இருந்தார். கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்தது.
இந்த கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை விஜய் அறிமுகம் செய்வார் என தெரிவிக்கப்பட்டது .இந்த நிலையில் புதிய செயலியை அறிமுகம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. செயலியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே அதன் அறிமுக விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது . மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் வருகிற 24-ந்தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அன்றைய தினம் புதிய செயலியை தொடங்கி வைத்து மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.