டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம்..மழைக்கால கூட்டத்தொடரை அமைதியான முறையில் கொண்டு செல்ல திட்டம்!
இந்தியா கூட்டணி கட்சிகள் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில் இன்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21-ந்தேதி தொடங்க உள்ளது.இந்த கூட்ட தொடரில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, போர் நிறுத்தத்திற்கு உரிமைகோரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அறிவிப்பு ஆகியவை பற்றி கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் மொத்தம் 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மழைகால கூட்டத்தொடர் ஆகஸ்டு 21-ந்தேதி வரை நடைபெறுகிறது.ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்டு 12 முதல் 18-ந்தேதி வரை நாடாளுமன்ற தொடருக்கு இடைவெளி விடப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மழை கால கூட்டத்தொடரை முன்னிட்டு , இந்தியா கூட்டணி கட்சிகள் நேற்று ஆலோசனை நடத்தினர் . இதில், என்ன வகையான கேள்விகளை கேட்பது, கூட்டத்தொடரை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன.கூட்டத்தொடரில், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்பட 24 கட்சிகள் பங்கேற்றன.
இந்நிலையில், டெல்லியில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது . இதில், கூட்டத்தொடரை அமைதியான முறையில் கொண்டு செல்வதற்கான விசயங்கள் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.