கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்..இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

Loading

அரசு அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றிட வேண்டும் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  மாநில செயலாளர் அ.மு.சலீம், மாநில துணை செயலாளர் K.சேதுசெல்வம், தேசிய குழு உறுப்பினர் I.தினேஷ் பொன்னையா ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறிருப்பதாவது:பொது இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் அமைத்துள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்றிட வேண்டுமென்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை, தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில், புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்‌யூன் பஞ்சாயத்து நிர்வாகங்கள் அவசரகதியில் கொடிக்கம்பங்களை அகற்றி உள்ளன.‌ இதில் அதிகமான அளவில் அகற்றப்பட்டது எங்கள் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் ஆகும்.

விளிம்பு நிலை மற்றும் ஏழை, எளிய மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அரசியல் அமைப்புகள் மற்றும் சங்கங்கள், மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொடிக்கம்பங்களை அமைத்து காட்சிப்படுத்தி கொள்வது ஜனநாயக அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

இவ்வாறாக தங்களை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம் உழைக்கும் மக்களோடு ஜீவனுள்ள ஒரு தொடர்பை கட்சிகளும், சங்கங்களும் ஏற்படுத்திக் கொள்கின்றன. தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இது சம்பந்தமாக விசாரிப்பதற்கு ஒரு பெரிய அமர்விற்கு உத்தரவிட்டுள்ளார் .

வரும் 16.8.2025 வரை கொடிக்கம்பங்கள் அகற்றும் உத்தரவை நிறுத்தி வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே தாங்கள் உடனடியாக கொடி கம்பங்கள் அகற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.

மேலும் 2000-ம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதுச்சேரி பொது இடங்கள் அழகு சிதைவு தடுப்புச் சட்டத்தின் படி, கொடிக்கம்பங்கள் அமைப்பது பொது இடத்தின் அழகை சிதைப்பது ஆகாது.
ஆனால் சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள பேனர்கள் பொது இடங்களின் அழகை கெடுப்பதுடன், போக்குவரத்திற்கு இடையூறாக, உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.

எனவே, சட்டத்திற்கு புறம்பாக தனி நபர்களாலும், அமைப்புகளாலும் அமைக்கப்படும் தேவையற்ற பேனர்களை சட்டப்படி அகற்றிட ஆவன செய்திட கோருகிறோம்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0Shares