மு.க.முத்துவின் உடல் தகனம்..அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

Loading

மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர், அமைச்சர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் மு.க.முத்துவின் உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் மூத்த மகனும், பத்மாவதியின் முதற்புதல்வருமான மு.க.முத்து (77), நீண்டநாள் உடல்நலக்குறைவால் இன்று காலை 8 மணியளவில் காலமானார்.

மு.க.முத்துவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கலைஞர் இல்லம், கோபாலபுரத்தில் வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட அரசியல் மற்றும் பொதுத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்
பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் சத்யராஜ், எஸ்.வி. சேகர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும்,தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட பல அரசு உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.மு.க தலைவர் ஜி.கே. வாசன் தொலைபேசியில் முதலமைச்சரிடம் இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து மு.க.முத்துவின் உடல் கோபாலபுரத்திலிருந்து பெசன்ட் நகர் மின்மயானம் வரை நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர், அமைச்சர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் மு.க.முத்துவின் உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

0Shares