லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட காவல் துணை ஆய்வாளர்!

Loading

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு நிலை காவல் துணை ஆய்வாளர் ஜி. பக்கிரிசாமி கைது செய்யப்பட்டார்.

மத்திய புலனாய்வு துறையின் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு (CBI-ACB) இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு நிலை காவல் துணை ஆய்வாளர் ஜி. பக்கிரிசாமி அவர்கள், ஒரு புகார்தாரரிடமிருந்து ஐந்து ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, மத்திய புலனாய்வு துறையின் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவைச் சேர்ந்த இணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான ஐந்து அதிகாரிகள் கொண்ட குழு இன்று (18.07.2025) காலை சுமார் 9:30 மணி முதல் 11:30 மணி வரை திருநள்ளாறு காவல் நிலையத்திற்கு அருகே கையும் களவுமாக பிடித்து கைது செய்தது.

புகார்தாரர், சிகரெட் மற்றும் பீடிகளை மொத்தமாக வாங்கி, அவர் குடியிருக்கும் வீட்டில் இருப்பு வைத்து, சில்லறையாக கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார்.

கடந்த 02.06.2025 அன்று, புகார்தாரர் வீட்டிற்கு வந்த சிறப்பு நிலை காவல் துணை ஆய்வாளர் ஜி. பக்கிரிசாமி மற்றும் காவலர் விஜயபாலன் ரூ.1,90,300 மதிப்புள்ள பல வகையான சிகரெட் மற்றும் பீடி ரகங்களை அவரிடமிருந்து பறிமுதல் செய்து, அவரை கைது செய்துவிட்டு, அன்று இரவு காவல் நிலைய பிணையில் விடுவித்தனர். அதே நாளில் திருநள்ளாறு காவல் நிலையத்தில் வழக்கு எண் 86/2025 என்று பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு பொய்வழக்காகும் என்பதற்கான ஆதாரங்கள் பல உள்ளன.

பிறகு, கடந்த 06.07.2025 அன்று, அந்த நபர் காரைக்கால் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி ரூ.200 அபராதம் செலுத்தி, சுமார் ரூ.1,50,000 மதிப்புள்ள பொருட்களை முறைப்படி திரும்பப் பெற்றார்.

ஆனால், அந்த வழக்கில் பறிமுதல் செய்த அனைத்து சிகரெட் மற்றும் பீடி பொருட்களையும் காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. ஒரு பகுதியை நீதிமன்றத்திலிருந்து மறைத்து, காவல்துறையினர் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.30,000 எனக் கூறப்படுகிறது.

நீதிமன்றத்திற்கு ஒப்படைக்காமல் மறைத்து வைத்த பறிமுதல் செய்யப்பட்ட மீதமுள்ள பொருட்களை புகார்தாரரிடம் திருப்பிக்கொடுக்க, அந்த ஐந்தாயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டுக்கொண்டார் சிறப்பு நிலை காவல் துணை ஆய்வாளர் ஜி. பக்கிரிசாமி.

முன்னதாக, 08.07.2025 அன்று, இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில தலைவர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார், முகநூலில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “திருநள்ளாறு காவல் நிலையத்தில் லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் வருகின்றன; இது குறித்து மக்கள் தகவல்களை வழங்கினால், லஞ்சம் பெறும் அதிகாரிகளை கையும் களவுமாக அரசு பிடிக்க இயக்கம் உதவும்” என முன்கூட்டியே அறிவித்திருந்தார். அந்த பதிவைப் பார்த்த ஒருவர், லஞ்சம் வாங்கும் அதிகாரியை மடக்கிப் பிடிக்க, புகார் கொடுக்க முன்வந்தார். இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் அவருக்கு சட்டரீதியான ஆலோசனைகளை வழங்கி, மத்திய புலனாய்வு துறையுடன் புகார்தாரரை ஒருங்கிணைத்து உதவியது.

அதைத் தொடர்ந்து, மத்திய புலனாய்வு துறை மிக வேகமாக செயல்பட்டு, வழக்கு RC No.15/2025 என 18.07.2025 அன்று பதிவு செய்து, சிறப்பு நிலை காவல் துணை ஆய்வாளர் ஜி. பக்கிரிசாமியை ரூ.5,000 லஞ்சம் வாங்கும் சுற்றி வலைத்து போது கைது செய்தது.

முதல் கட்ட விசாரணையில் ஆய்வாளர் செந்தில்குமாருக்கும் தொடர்பு இருந்ததாக ஒரு சில ஆவணங்கள் அடிப்படையில் தெரிய வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகு, அவர் மீதும் சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை சுமார் 7:00 மணி வரை காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது. பிறகு ஜி.பக்கிரிசாமி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட, அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

 

0Shares