சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி பதவி நீக்கம்!
சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி நகர்மன்றத் தலைவர் பதவியை இழந்தார்.நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பதவி பறிபோனது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
மொத்தம் 30 கவுன்சிலர்களில் 29 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இதில் 28 வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக, ஒரே ஒரு வாக்கு மட்டுமே உமா மகேஸ்வரிக்கு கிடைத்தது.
முதலிலிருந்தே கவுன்சிலர்களுடன் ஏற்பட்ட மோதல்கள், அடிப்படை வசதிகள் குறித்த குற்றச்சாட்டுகள் காரணமாக, கடந்த ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், அப்போது திமுக தலையீட்டில் அவர் பதவி தப்பினார். ஆனால் மோதல் நீடித்ததால் மீண்டும் மனு அளிக்கப்பட்டது.ஒரு சில மாதங்கள் மட்டும் நகர்மன்ற கூட்டம் அமைதியாக நடந்தது. அப்புறம் விவாதம் வாக்குவாதம் என்று தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்புடன் இன்று நடந்த வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேறி, உமா மகேஸ்வரி பதவியை இழந்தார்.
இன்று கவுன்சிலர்களிடையே நடந்த ரகசிய வாக்கெடுப்பிலும் 28 வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக விழுந்துள்ளன. இதனைத்தொடர்ந்து சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி நகர்மன்றத் தலைவர் பதவியை இழந்தார்.