மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்..அமலுக்கு வந்தது சட்டத்திருத்தம்!
தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டும் நபர்கள் மீது இனி குண்டர் சட்டம் பாயும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான சட்டத்திருத்தத்திற்கு கவர்னர் ஆர்.என். ரவி கடந்த மாதம் ஜூலை 8ஆம் தேதி ஒப்புதல் அளித்ததன் பேரில் அது சட்டமாகி தற்போது அமலுக்கு வந்துள்ளது.
கடந்த சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 மசோதாக்களில், இது முக்கியமானதாகும்.அப்போது பயோ மெடிக்கல் வேஸ்ட் (உயிரி மருத்துவக் கழிவு) முறையற்ற வகையில் குவித்தாலோ, கொட்டினாலோ அது தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும்.
இது நீர் நிலைகள், பொது இடங்கள், மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவந்த மருத்துவக் கழிவுகள் என அனைத்தையும் உள்ளடக்கியது.பொதுநலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகளை கொட்டினால், விசாரணையின்றி கைது செய்து சிறையிலடைக்கும் அதிகாரம் அரசுக்கு கிடைக்கும்.
குற்றவாளிகளின் மீது பொது அறிவிப்பு (Public Notice) வெளியிடப்படும்.மேலும், சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.இந்தநிலையில் ஜூலை 8, 2025 முதல் தமிழ்நாட்டில் இது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதுகாப்பு நோக்கில், இது ஒரு முக்கியமான கட்டுப்பாட்டு நடவடிக்கை என்றும், மருத்துவ நிறுவனங்கள், நுகர்வோர் மற்றும் கழிவு மேலாண்மை நிறுவனங்கள் அனைத்தும் இந்த சட்டத்தை கடுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.