வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்த போலி உதவி கலெக்டர்… வெளியான பரபரப்பு தகவல்கள்!
உதவி கலெக்டர் எனத் தன்னை கூறி வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர், தற்போது போலி ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நவீன்குமார் (29), திருச்செங்கோடு அருகே பெரியமணலி பகுதியைச் சேர்ந்தவர். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றுகிறார்.இவருக்கும், தன்வர்த்தினி (29) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது, தன்வர்த்தினி பொள்ளாச்சியில் உதவி கலெக்டராக பணியாற்றுவதாக கூறப்பட்டதாம்.சில மாதங்களில் அவ்வாறு அதிகாரப்பூர்வமாக பணியாற்றவில்லை என்பது நவீன்குமாருக்கு தெரிந்ததாம்.
இதையடுத்து நவீன்குமார், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, தன்வர்த்தினி கைது செய்யப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் தன்வர்த்தினி தங்கிய வீட்டில் இருந்து மடிக்கணினி உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.போலி ஆவணங்களை தயாரிக்க யாராவது உதவி செய்தார்களா? என்பது குறித்து விசாரணை தொடர்கிறது.
இதற்காக போலீசார் மனு தாக்கல் செய்ததை அடுத்து, மாஜிஸ்திரேட் 2 நாள் காவலில் வைக்க அனுமதி வழங்கினார்.விசாரணையில், தன்வர்த்தினி குரூப்–1, குரூப்–2 தேர்வுகளை எழுதியிருந்தாலும், தேர்ச்சி பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் போலி நியமன உத்தரவு ஆணை மற்றும் அடையாள அட்டை தயாரித்து, தன்னை உதவி கலெக்டர் என அடையாளப்படுத்தி ஏமாற்றியதாக தெரிகிறது.