இன்று கர்மவீரர் காமராசர் பிறந்ததினம்!

Loading

விருதுப்பட்டியில் குமாரசாமிக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். குல தெய்வம் பெயரான காமாட்சி என்று பெயர் வைத்துவிட்டு, சிவகாமி அம்மாள் “ராஜா” என்று தனது மகனை வாய் நிறைய அன்போடு அழைத்ததால் காமாட்சி, காம ராஜரானார்.

விருதுப்பட்டியிலேயே 1908 ஆம் ஆண்டு ஏனாதி நாராயண வித்யா சாலையில் ஆரம்பக்கல்வி படித்தார். அது கட்டணம் கட்டி படிக்கும் கல்வி.

தனது ஆட்சியில் கல்விக்கே முதலிடம் கொடுத்தார் காமராஜர். 1957ல் 15800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள் 1962ல் 29000 ஆக உயர்ந்தது. உயர்நிலை பள்ளிகள் மூன்று மடங்காயின.

“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற பாரதியின் வரியை உண்மையாக்க இரவும் பகலும் பாடுபட்டார் காமராஜர்.

தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எண்ணிக்கை 16 லட்சத்திலிருந்து 48 லட்சமாக உயர்ந்தது. அதில் 16 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 3 லட்சம் உயர்நிலை பள்ளிகள் 13 லட்சமாக உயர்ந்தது. தொழிற் கல்வி தொடங்கப்பட்டது. மெட்ராஸ் ஐஐடி தொடங்கப்பட்டது காமராஜர் ஆட்சியில்தான்.

பள்ளிக்கூடத்தை கட்டினாலும் பிள்ளைகள் சரியாக சேரவில்லை. ஒரு முறை ஒரு தாயிடம் “பிள்ளையை ஏன் பள்ளிக்கு அனுப்பவில்லை” என்று கேட்டார் காமராஜர். அதற்கு அந்த தாய் “என் பிள்ளை படித்து தாசில்தாரா ஆக போகிறான்?” என்று கேட்டார். உடனே காமராஜர் “உன் பிள்ளையை படிக்க வை. நான் தாசில்தார் ஆக்குகிறேன்” என்றார்.

கல்விப் பணிகள் அல்லாது தொழில் வளர்ச்சியிலும், பாசன வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதிலும் காமராஜருக்கு இணை யாரும் கிடையாது.

1. நெய்வேலி நிலக்கரி அனல் மின் நிலையம்.
2. கல்பாக்கம் அனு மின் நிலையம்.
3. திருச்சி திருவெறும்பூர் பெல் தொழிற்சாலை.
4. கிண்டி டெலி பிரிண்டர் ஆலை
5. சேலம் இரும்பு உருக்கு ஆலை.
6. பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலை.
7. ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை.
8. மேட்டூர் காகித ஆலை.
9. அரக்கோனம் ஸ்டீல் பிளான்ட்
10. சங்ககிரி சிமென்ட் ஆலை மற்றும்
11. 14 சர்க்கரை ஆலைகள்
12. 159 நூற்பு ஆலைகள் காமராஜர் காலத்தில் உருவானவை.
பாசன வசதிகளை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க,
1. வைகை அணை
2. மணிமுத்தாறு அணை
3. கீழ்பவானி அணை
4. பரம்பிக்களம் அணை
5. சாத்தனூர் அணை
6. கிருஷ்னகிரி அணை
7. ஆரணியாற்று அணை போன்றவை ஏற்படுத்தி கொடுத்தவர் காமராஜர்.

இலவச கல்வி, இலவச மதிய உணவு, இலவச பாடப்புத்தகம் எல்லாவற்றுக்கும் முன்னோடி காமராஜரே.

சுதந்தரம் வாங்கிய போது பதினேழு சதவிகிதம் பேர்தான் படிப்பறிவு பெற்றவர்கள். அதை தனது ஆட்சி முடியும்போது 40 சதவிகிதமாக்கி சாதித்தார் காமராஜர்.

திருவெறும்பூரில் பெல் தொழிற்சாலை அமைக்க முடியாது என்று சொன்ன பொறியாளரிடம்,”படிக்காதவன் நான் இப்படி சொல்லலாம். படித்தவன் நீ இப்படி சொல்லலாமா?” என கேட்டு, “பத்து நாளில் புராஜெக்டை ரெடி பண்ணிக்கொண்டு வா” என உத்தரவிட்டவர் காமராஜர்.

முதலமைச்சர் என்ற முறையில் மருத்துவ படிப்புக்கு பத்து சீட் காமராஜருக்கு ஒதுக்கீடு வந்த போது விண்ணப்பங்களில் பெற்றோர் என்ற இடத்தில் கைநாட்டு வைத்தவர்கள் குடும்பத்தை தேர்ந்தெடுத்து, படிப்பறிவில்லா குடும்பத்தவரை டாக்டர் ஆக்கியவர் காமராஜர்.

ஓமந்தூரார் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டை (Communal GO) மெட்ராஸ் கோர்ட ரத்து செய்த போது, தனது செல்வாக்கால் நேருவிடம் சொல்லி அரசியல் சட்டத்தை முதன்முறையாக திருத்தி 1951ல் பிற்பட்டவருக்கு 25% மற்றும் தாழ்த்தப்பட்டவருக்கு 15% ஒதுக்கீடு கிடைக்க ஏற்பாடு செய்தவர் காமராஜர்.

 

0Shares