வேலை கொடுக்காததால் பிடிஒ அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!
100 நாள் வேலை கொடுக்காததால் வில்லியனூர் பிடிஒ அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .இதையடுத்து அதிகாரிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சுவார்த்தை நடத்தினார்.
வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில் மத்திய அரசின் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கொடுக்காமல் வெறும் 8 நாட்கள் மட்டுமே வழங்கப்படுவதால் அத்திட்டத்தில் பதிந்துள்ள ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இந்த நிலையில் வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட உத்திரவாகினிப்பேட், பெரியப்பேட், கரையான்பேட், புதுப்பேட், சுப்ரமணிய சிவா நகர் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் பகுதியில் 100 நாள் வேலை திட்டம் முழுமையாக புறக்கணிக்கப்படுவதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்களிடம் இன்று காலை புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விசாரிக்க தொடர்பு கொண்டபோது அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் அறையையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் திட்ட அதிகாரி தயானந் டெண்டுல்கர் மற்றும் இணை இயக்குநர் கலைமதி ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தும் வில்லியனூர் சட்டமன்ற தொகுதி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் தொகுதி என்பதால் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. ஒன்றிய அரசும், மாநில அரசும் 100 நாள் வேலையை முழுமையாக கொடுப்பதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அது இல்லை என்பதை எங்களால் ஆதாரத்துடன் கூற முடியும். குறிப்பாக வில்லியனூர் தொகுதியில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வசிக்கக் கூடிய பகுதிகளில் ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 8 நாட்கள் கூட வேலை வழங்கப்படாத அவலம் தொடர்கிறது. இதுகுறித்து சட்டமன்றத்திலும், துறையிலும் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய திட்ட மதிப்பீடு தயார் செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்ப தவறிவிட்டனர். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், இத்துறை மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், விவசாயிகள் மற்றும் கழிப்பிடம் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களில் வழங்கப்பட்ட கடனுதவியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் இவ்வலுவலகத்தில் சிஸ்டம் செயல்பகிறது. இங்குள்ள அதிகாரிகள், கடன் பெறுபவர்கள், வங்கி அதிகாரிகளின் கூட்டு சதியே இதற்கு காரணமாக உள்ளது. துறை மூலம் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட டிராக்டர் உள்ளிட்ட உழவுப் பொருட்கள் அனைத்தும் கொடுத்தவர்களிடம் உள்ளதா அல்லது வெளியில் விற்கப்பட்டுள்ளதா என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். கழிப்படம் கட்டுவதில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் வழக்கில் பாதிக்கப்பட்டு கழிவறை கட்டாமல் உள்ளவர்களுக்கு இன்னும் கடனுதவி அளிக்காமல் உள்ளதை கவனத்தில் கொண்டு உடனடியாக கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வில்லியனூர் தொகுதியில் 100 நாள் வேலை திட்டம் குறைந்தது 20 நாட்களாவது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த திட்ட அதிகாரி புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், வில்லியனூர் தொகுதியில் நாளை முதல் 100 நாள் வேலை பணி தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் எதிர்க்கட்சித் பேசி போராட்டத்தை கைவிட வைத்தார். இதனால் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் 2 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.