மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு :
திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழைகால முன்னெச்சரிக்கையாக மழைநீர் வெள்ளம் வெளியேறும் வகையில் கால்வாய்கள் அனைத்தையும் ஆட்சியர் பார்வையிட்டு சீரமைக்க வலியுறுத்தி வருகிறார்.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் மழைநீர் கால்வாய்களை ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார். அதில் காட்டுப்பாக்கம் ஊராட்சி அம்மன் நகர் பகுதியில் பருவமழை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு செய்து, மழை வெள்ள நீர் வெளியேறும் விதமாக அனைத்து பணிகளையும் விரைந்து மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார்.
அதைத் தொடர்ந்து குமணன் சாவடி ஊராட்சி,செல்வகணபதி நகர்,பூந்தமல்லி நகராட்சி அம்மா நகர்,பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சி ஆகிய பகுதியில் பருவமழை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர்கள் கோவேந்தன் செந்தூர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி(வ.ஊ), மகேஷ்பாபு(கி.ஊ) மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைகள் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.