நாளை குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு..காலை 8.30 மணிக்குள் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும்!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 12 ம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு நாளை 12.07.2025 (சனிக்கிழமை) முற்பகல் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 99 தேர்வு மையங்களில் உள்ள 126 தேர்வு கூடங்களில் 38117 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

மேலும், தேர்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதியும், பார்வையற்றோர் தேர்வு எழுதிட மாற்று நபர் தனி அறைகள் கொண்ட வசதியும் ஒவ்வொரு தேர்வுக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வுகூடங்களிலும் தனித்தனியாக போலீசார் பாதுகாப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தேர்வுகள் சிறப்பாக நடைபெற 126 தலைமை கண்காணிப்பாளர்கள், 39இயக்கக் குழு அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலையில் 09 பறக்கும் படை குழுக்கள், மற்றும் 126 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி தேர்வில் பங்கு பெறும் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட், திருவள்ளூர் மண்டலம் மூலமாக பேருந்து வசதி சற்று குறைவாக உள்ள இடங்களான கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பென்னலூர்பேட்டை, ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களுக்கு 85 சிறப்பு பேருந்துகளும், மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலமாக 119 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.

தேர்வு எழுத வரும் தேர்வர்கள் சரியாக காலை 8.30 மணிக்குள் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும். காலை 9.00 மணிக்குள் வராதவர்கள் தேர்வாணைய அலுவலர்களால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 9.30 மணி முதல் 12.30மணி வரை தேர்வு நடைபெறும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு நேரம் முடிந்தும் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும் என்பதை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

0Shares