தலித் சமுதாயத்தை புறக்கணித்தால் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும்..EX.MLA சாமிநாதன் எச்சரிக்கை!

Loading

ஆளும் அரசு தலித் சமுதாயத்தை புறக்கணித்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் கூறியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட தலித் சமுதாயத்தை சேர்ந்த இருவர் சட்டமன்றத்தில் அமைச்சர்களாக அறிவித்தனர். பின்னர் பல்வேறு காரணங்களுக்காக தற்பொழுது இரண்டு தலித் அமைச்சர்களும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. மேலும் எந்த அரசாங்கமாக இருந்தாலும் தலித் சமுதாயம் ஒடுக்கப்படாமல் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அரசு அளிக்க வேண்டும், இல்லையென்றால் ஜனநாயகமும் சமூக நீதியும் கேள்விக்குறியாக மாறிவிடும்.

கடந்த 50 ஆண்டுகளில் தலித் சமுதாயத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரி அமைச்சரவையில் தொடர்ந்து இடம் பெற்று வந்துள்ளனர். இதுவே மரபாகவும் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது அமைச்சரவையில் தலித் சமுதாயத்தை சார்ந்தவர்கள் யாரும் இடம்பெறவில்லை. இது அரசியலுக்கு அப்பாற்பட்டு அந்த சமுதாய மக்களிடம் ஆளும் அரசு மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் அரசு தலித் சமுதாயத்தை புறக்கணித்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும். மக்கள் ஏற்கனவே அரசின் மீது பல்வேறு வகையில் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஒட்டுமொத்தமாக ஒரு சமுதாயமே புறக்கணிக்கப்பட்டால், மேலும் மிகப்பெரிய பாதிப்பை அரசு எதிர் கொள்ள நேரிடும். எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக இதுகுறித்து ஆய்வு செய்து தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சரவையில் இடமளித்து, தலித் சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தலித் சமுதாய மக்களின் எண்ணமாக உள்ளது. கடந்த காலங்களில் அரசு ஆதிதிராவிடருக்கு ஒதுக்கிய நிதியை பல்வேறு தலைப்புகளில் செலவு செய்தனர். தொடர்ந்து ஆட்சியாளர்கள் தலித் மக்களுக்கு எதிரான மனநிலை இருப்பது கண்டிக்கத்தக்கது. நாட்டின் உயர் பதவியான ஜனாதிபதி பதவியில் தலித் மற்றும் பழங்குடியினர் உயர் பதவியை இந்தியாவில் வகித்தனர். தற்பொழுது சிறிய மாநிலத்தில் ஒரு தலித் சமுதாயத்தை அமைச்சராக்குவதில், மத்திய மாநில அரசுகள் தடுமாற்றத்தில் உள்ளது. சரியான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். மக்களின் மனதை புரிந்து கொள்ளவில்லை என்றால் வரும் சட்டமன்றத் தேர்தல் மக்கள் அவர்கள் பதிலை தேர்தல் மூலம் தெரிவிக்கும் சூழ்நிலை வரும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் கூறியுள்ளார்..

0Shares