மக்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய அமைச்சர் நாசர் !
கோவில் பதாகை பகுதியில் ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை பார்வையிட்டு பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மருந்துகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.5 கோடியே 20 இலட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, கோவில் பதாகை பகுதியில் ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் கட்டடப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டு பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மருந்துகளையும் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, துணை மேயர் சூரியகுமார், துணை இயக்குனர்கள் மரு.பிரபாகரன் (பூவிருந்தவல்லி) பிரியா (திருவள்ளூர்), மாநகராட்சி சுகாதார அலுவலர் மரு.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.