காதல் திருமண விவகாரத்தில் ஆள் கடத்தல்.. 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு!
திருவள்ளூர் அருகே காதல் திருமண விவகாரத்தில் ஆள் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள பெண்ணின் தந்தை உட்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளார்.
திருவள்ளூர் அடுத்த களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா ஸ்ரீ என்ற இளம் பெண்ணும் காதலித்து ஏப்ரல் 15-ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டு தலைமறைவானார்கள்.இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை பிரித்து அழைத்துச் செல்ல புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி , ஏடிஜிபி ஜெயராமன் உதவியை நாடினர், இந்நிலையில் கடந்த மாதம் 7-ஆம் தேதி அதிகாலை தனுஷின் தம்பியான இந்திரச்சந்த் என்பவரை ஏடிஜிபி ஜெயராம் காரில் கடத்திச் சென்று அவர் அண்ணன் இருப்பிடம் கேட்டு பின்னர் விட்டனர்.
இது தொடர்பாக தனுஷின் தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருவாலங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதில் விஜயா ஸ்ரீ தந்தை வனராஜா மற்றும் கணேசன், மணிகண்டன் விருப்ப ஓய்வு பெற்ற எஸ்ஐ மகேஸ்வரி, வழக்கறிஞர் சரத்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை அடுத்தடுத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், சரத்குமார் , மகேஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆள் கடத்தல் வழக்கில் மூளையாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இருவரும் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் ஏடிஜிபி ஜெயராமன் கைது உத்தரவை ரத்து செய்தும், பூவை ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமின் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது,இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு இருப்பதால் சிபிசிஐடி போலீசார் முதல் கட்ட விசாரணை தொடங்கியுள்ளனர்,புகார் தாரரான தனுஷின் தாய் லட்சுமி மற்றும் திருமணம் செய்து கொண்ட தனுஷ் மற்றும் விஜயா ஸ்ரீ ஆகியோரிடம் போலீசார் விசாரணை முடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள விஜயா ஸ்ரீயின் தந்தை வனராஜா மற்றும் மணிகண்டன் , கணேசன், விருப்பு ஓய்வு பெற்ற எஸ் ஐ மகேஸ்வரி , வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.இதனால் சிபிசிஐடி போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள மனு அளித்துள்ளனர்,இவர்கள் ஐந்து பேரிடம் விசாரணை செய்த பிறகு புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.