திரு.தண்டபாணி சுவாமிகள் நினைவு தினம்!.
எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடிகளில் இவர் 1 லட்சம் பாடல்கள் எழுதிய திரு.தண்டபாணி சுவாமிகள் நினைவு தினம்!.
எட்டு வயது முதலே, தமிழ் மொழியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இலக்கணமும், கவிதையும் எழுதிய வண்ணச்சரபம் திரு.தண்டபாணி சுவாமிகள் நினைவு தினம்!.
தமிழ் புலவர் தண்டபாணி சுவாமிகள் 1839ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சங்கரலிங்கம்.
பூமி காத்தாள்’ என்ற அம்மனுக்கு இப்பெயர் வருவதற்கான காரணத்தை, 8 வயதில் வெண்பா மூலம் பாடி விளக்கினார். முருகனைப் பற்றி ஏராளமான பாடல்கள் பாடியதால் முருகதாசன் என்றும், திருப்புகழைப் பாடிக்கொண்டே இருந்ததால் திருப்புகழ் சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.
உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, இடுப்பில் கல்லாடை அணிந்துக்கொண்டு, கையில் தண்டாயுதம் ஏந்திக் கொண்டு வலம் வந்ததால் இவரை மக்கள் தண்டபாணி சுவாமிகள் என்று போற்றினார்கள். மேலும் அகப்பொருளின் துறைகளை அமைத்து சந்த யாப்பில் ‘வண்ணம்’ என்ற பெயரில் பாடல்களைப் பாடியதால் வண்ணச்சரபம் என்றும் அழைக்கப்பட்டார்.
72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை 3 ஆயிரம் பாடல்களில் புலவர் புராணம் என்ற நூலாகப் படைத்தார். இவர் ஏராளமான கீர்த்தனைகள், தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.
முத்தமிழ் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழ் அலங்காரம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தவர். அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு ஆகிய 3 இலக்கண நூல்களையும் தந்துள்ளார்.
எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடிகளில் இவர் 1 லட்சம் பாடல்கள் எழுதியதாக கூறப்படுகிறது. அவற்றில் 50 ஆயிரம் பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கடும் தவத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட தண்டபாணி சுவாமிகள் 59-வது வயதில் 1898 ஜூலை 5 ஆம் தேதி அன்று மறைந்தார்.