கிருஷ்ணகிரியில் கடத்தப்பட்ட சிறுவன் கொலை..கிராம மக்கள் போராட்டம்!
கிருஷ்ணகிரியில் கடத்தப்பட்ட சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக கோவில் காவலாளி அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கியதில் லாக்அப் மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதியப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை நீதி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது,இந்தநிலையில் இந்த சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரியில் கடத்தப்பட்ட சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளான்,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் – மஞ்சு தம்பதியின் இளைய மகன் ரோகித். 13 வயதான ரோகித் அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சிறுவன் ரோகித்தை மர்மநபர்கள் காரில் கடத்திச் சென்றனர்.இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அஞ்சட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்தனர். ஆனால் இன்று காலை வரை சிறுவன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அஞ்செட்டியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் ரோகித் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.