வழி பாதை தகராறு.. பெண்ணை தாக்கிவிட்டு தலைமறைவான ராணுவ வீரரை தேடும் போலீஸ்!
நிலத்திற்கு வழி பாதை கேட்டு பெண்ணை தாக்கிவிட்டு தலைமறைவான ராணுவ வீரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் தொன்ன குட்லஹள்ளி ஊராட்சி ஏரிக்காடு சாம்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் குபேந்திரன் மனைவி ரேவதி அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான விவசாய நிலத்தில் தண்ணீர் செல்லும் குழாயை சீர்படுத்திட வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது இதே பகுதியை சேர்ந்த சாமிகண்ணு மகன் அரசு (இவர் ராணுவத்தில் பணியாற்றி வருபவர்) இவரது அம்மா ரத்தினம்மாள் ஆகிய இருவரும் தங்களின் நிலத்திற்கு வழி பாதை கேட்டு ரேவதி அவர்களிடம் தகராறு செய்துள்ளனர் .
வாக்குவாதம் முற்றியதில் அரசு மற்றும் அவரது அம்மா ரத்தினம்மாள் ஆகியோர் திடீரென ரேவதியை தாக்க ஆரம்பித்தனர், அடி தாங்க முடியாமல் ரேவதி அவர்கள் அலறியதில் அலறல் சத்தம் கேட்டு ரேவதியின் மகன்கள் விக்னேஷ், தினேஷ் ஆகியோர் அம்மாவை தாக்குவதைக் கண்டு ரேவதியை காப்பாற்ற முயன்று உள்ளனர்,
காப்பாற்ற சென்ற விக்னேஷ் மற்றும் தினேஷ் ஆகியோரையும் அரசு மற்றும் ரத்தினம்மாள் தாக்கினார்கள் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ராணுவ வீரரான அரசு ரேவதியின் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு அரசு மற்றும் அவரது அம்மா ரத்தினம்மாள் அங்கிருந்து ஓடி விட்டனர்.
அரசு மற்றும் ரத்தினம்மாள் தாக்கியதில் பலத்த காயமடைந்த ரேவதி அவர்கள் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து ஏரியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ரேவதியை தாக்கிய ரத்தினம்மாள் அவர்களை கைது செய்து தலைமறைவான ராணுவ வீரர் அரசு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.