குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவு பணியிடங்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும்..திமுக வலியுறுத்தல்!

Loading

ஜிப்மரில் உள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவு பணியிடங்களில் 50 சதவீதத்தை புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் திருமிகு. இரா. சிவா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்துஎதிர்க்கட்சித்தலைவர்திருமிகு.இரா.சிவாகூறியிருப்பதாவது:புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. அதுபோல் படித்த முடித்து வெளியே வருபவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் படித்து முடித்து வருபவர்களுக்கு வேலை தரக்கூடிய தொழில் நிறுவனங்கள் ஏதும் புதுச்சேரிக்கு ஆட்சியாளர்களால் கொண்டுவரப்படவில்லை. இதனால் படித்து முடித்த புதுச்சேரி இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி சுற்றித் திரிகின்றனர். அவர்களில் பலர் போதைக்கு அடிமையாகின்றனர், சிலர் சட்டவிரோத செயல்களுக்கு பழக்கமாகி வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க புதுச்சேரியில் உள்ள ஜிப்பமர், பல்கலைக்கழகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்படுவதில்லை. அனைத்து வேலைகளும் வெளிமாநிலத்தவர்களுக்கே வழங்கப்பட்டு வருகிறது. இதனை பார்க்கும் புதுச்சேரி இளைஞர்களும் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுத்து புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவீதத்தை புதுச்சேரி இளைஞர்களுக்கு பெற்றுத்தர அரசு உறுதியேற்ற செயல்பட வேண்டும்.

தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஜிப்மரில் 36 சீனியர் உள்ளிருப்பு மருத்துவர்கள், 50 ஜூனியர் உள்ளிருப்பு மருத்துவர்கள், 400 செவிலியர்கள் உள்ளிட்ட 557 பணியிடங்களை உருவாக்க அனுமதி அளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிப்மரில் சுமார் 400 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டபோது 90 சதவீதம் பேர் கேரளா மாநிலத்தில் இருந்தே பணிக்கு வந்தனர். அப்போது கேரளாவைச் சேர்ந்தவர் ஜிப்மரில் உயர் பதவியிலும் இருந்தார்.

எனவே இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க புதுச்சேரி அரசு உடனடியாக ஜிப்மரில் உள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவு பணியிடங்களில் 50 சதவீதத்தை புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி பெற வேண்டும்.

அதுபோல் ஜிப்மரில் துப்புரவு, செக்யூரிட்டி போன்ற நான்காம் நிலை ஊழியர் பணியிடங்கள் சுமார் 1200 தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் தரும் அப்பணிகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டே வேலை வழங்கப்படுகிறது. மேலும் ஓராண்டு முடிந்தவுடன் ஆட்களை வழங்கி வரும் நிறுவனம் கைமாறி விடுகிறது. அப்போது ஒப்பந்தத்தை எடுக்கும் நிறுவனம் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றால் லஞ்சம் தரவேண்டும் என கேட்டு பெறுகிறது. அப்போது தாங்கள் ஜிப்மரில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தையே பணிநிரந்தரம் செய்யப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையில் கொடுக்கின்றனர். தாங்கள் வழங்கிய லஞ்சத்தையே மீண்டும் வேலை செய்து சம்பளமாக பெறுகின்றனர்.

அதுபோல் 2012ல் எம்டிஎஸ் பதவியில் நியமிக்கப்பட்டவர்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் 180 பேர் திரும்ப சென்றுவிட்டனர். இதனால் அந்த பணியிடம் நிரப்பப்படாமலேயே உள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதுடன், பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 557 தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

ஜிப்மரில் உள்ள நான்காம் நிலை பணிக்கான ஊழியர்கள் அனைவரையும் நிரந்தமாகவே நியமிக்கவும், அதில் 75 சதவீத பணிகளை புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கே வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குரூப் சி பணியிடங்களில் தொடக்கத்தில் என்ன சம்பளத்தில் சேர்கின்றார்களோ அதே சம்பளமே பணி ஓய்வு பெறும்வரை வழங்கப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரேடு பே உயர்த்தி தர வேண்டும். மேலும் புதிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றாக ஊழியர்கள் விரும்ப கூடிய மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தையே ஜிப்மர் ஊழிர்கள் அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் திருமிகு. இரா. சிவா வலியுறுத்தியுள்ளார்..

0Shares