இந்திய விடுதலைப் போராட்ட வீரர் திரு.அன்சாரி துரைசாமி அவர்கள் பிறந்ததினம்!.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், புதுச்சேரி விடுதலை இயக்கப் போராட்டத் தளபதி திரு.அன்சாரி துரைசாமி அவர்கள் பிறந்ததினம்!.
தியாகி அன்சாரி துரைசாமி ( Ansari Duraisamy, ஜூலை 2, 1906 – ஏப்ரல் 27, 1994)
புதுச்சேரி மாநிலம் அம்பலத்தடையார் மாடத்து வீதியில் பெரியசாமி நாயக்கர் – தனபாக்கியம் இணையருக்கு மகனாக பிறந்த இவருக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் துரைசாமி ஆகும்.
பெத்தி செமினார் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியையும், கொலோனியா கல்லூரியின் கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.
உப்பு சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கி பல்வேறு போராட்டங்களில் தீவிரமாகப் பங்காற்றியதால் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிப் பலமுறை சிறை தண்டனையை அனுபவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் இயக்கத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் அன்சாரி பேச்சால் கவரப்பட்டு அரசியலுக்கு வந்ததால் தன் பெயரோடு அன்சாரி என்ற பெயரை முன் சேர்த்து அன்சாரி துரைசாமி என அழைக்கப்பட்டார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948இல் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருக்கும் இந்திய பகுதியான புதுச்சேரி விடுதலை பெற்று இந்திய தாயகத்தோடு இணைக்க வேண்டும் என்பதற்காக பிரெஞ்சு இந்திய காங்கிரஸ் இயக்கத்தை தோற்றுவித்து அதன் செயலாளராக பணியாற்றினார்.
பொது நலனில் ஈடுபட்டு சொத்துக்கள் பலவற்றையும் இழந்து நஷ்டபட்டார். புதுச்சேரி மாநில விடுதலைக்கு பின்னர் நடந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காசுக்கடை தொகுதியிலிருந்து 1969,1974,1977 தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார். தான் வகிக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த உத்திரவேலு என்பவரை எதிர்க்கட்சி தலைவராக்கினார்.
மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்ஷாவில் ஏறமாட்டேன் என விரதம் பூண்டு கடைசிவரை கடைபிடித்தார். தவறு செய்பவர் எவராயினும் தட்டிக் கேட்கும் குணம் படைத்தவராக திகழ்ந்தார். இவருக்கு தெரியாமலேயே துணைநிலை ஆளுநர் செட்டிலால் பரிந்துரையால் இவர் தியாகத்தை பாராட்டும் வகையில் தாமரைப் பட்டயம் வழங்க முடிவு செய்யப்பட்டது. நண்பர்கள் வற்புறுத்தலால் கவர்னர் அறையில் சென்று தாமரைப் பட்டயம் பெற்றுக் கொண்டார்.
கடைசிவரை தியாகத்துக்கு அளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை பெறவே இல்லை. மாநில ஜனதா கட்சித் தலைவராக 27.04.1994 இல் மறையும் வரை இருந்தார்.02.07.2007 இல் நூற்றாண்டு விழாவை அரசு நடத்தியது. விடுதலைப் போராட்ட வீரர்களை உருவாக்கிய வீரத்துறவியான அன்சாரி துரைசாமி 1994 ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று மறைந்தார்.