இந்த ஆண்டு இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் திறக்க வாய்ப்பு..அமைச்சர் சேகர்பாபு தகவல்!
குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையம் இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் பணிகளை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது: சென்னையின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்துக்கான பணிகள் முடிவடைந்து விட்டன. இப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டியுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் இந்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.துறையின் செயலாளர் காகர்லா உஷா,உறுப்பினர் செயலாளர் பிரகாஷ்,இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி,போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து, எங்கள் துறையின் சிஇஓ சிவஞானம் ஆகியோர் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டடோம்.
பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில்: பயணிகள் நிறுத்தும் இடங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதி, ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு ஓய்வறைகள், உணவகங்கள், மருத்துவ வசதிக்கான கட்டமைப்பு, பாதுகாப்புக்கான காவல் அமைப்பு என அனைத்தும் இன்றே நேரில் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவாக முடிக்கப்படும். பருவமழையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. பருவமழை பெரியளவில் இல்லையெனில் 2025 நவம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும்.வாரத்திற்கு ஒரு முறையாவது, நானோ அல்லது துறையின் செயலாளரோ அல்லது உறுப்பினர் செயலாளரோ, இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு முன்னேற்றத்தை கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட போது சில சிக்கல்கள் இருந்தன. ஆனால் தற்போது அவை அனைத்தும் முறையாக தீர்க்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் எந்த கட்டுமானத்திலும் சிறிய சிக்கல்கள் இருக்கும் ஆனால் திட்டமிடல் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் ஆரம்பித்த நிலையம் இப்போது திட்டமிட்டு பயணிகள் வசதிக்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது.இரவு 11, 12 மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதாக புகார்களுடன் 50-100 பேர் வந்தால் கூட, அதற்கேற்ப உடனடி ஏற்பாடுகள் செய்து பேருந்துகளை இயக்கி வருகிறோம். பகலில் எந்தவித சிக்கலும் இல்லாமல் இயங்கி வருகிறது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா,சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம்,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்,பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, குத்தம்பாக்கம் பேருந்து முனைய தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர் பிரின்ஸிலி ராஜ்குமார், கண்காணிப்பு பொறியாளர் ராஜமகேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.