உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆவடி வட்டத்திற்கு உட்பட்ட திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில் (ராமதாஸ்புரம் இருந்து பட்டாபிராம் பிரகாஷ் நகர் வரை) ரூ.3.46 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ள திட்ட பணிகள் குறித்தும், திருநின்றவூர் கோமதிபுரத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் முதல்வர் மருந்தகத்தின் திட்டப் பணிகள் குறித்தும், பின்னர் நியாய விலை கடையில் பொருட்களின் தரம், இருப்பு அதன் அளவு விரல் ரேகை பதிவேடு,பொதுப்பணித்துறை நீர் வளம் சார்பில் ஈசா ஏரி, ராமர் மதகு பகுதியில் ரூ.9.01 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்பு பணிகள் நடைபெற உள்ளதையொட்டி மேற்கொள்ளப்படும் திட்ட பணிகள் குறித்தும், கொட்டாம்பேடு கிராமத்தில் வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் 11 ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் (2025-26) நெல் இயந்திர நடவு வயல் சாகுபடி பரப்பினை பார்வையிட்டு அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து பாலவேடு ஊராட்சியில் மேலபேடு கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டிடம் கட்டுமான பணிகளையும், அதே ஊராட்சியில் நூலகத்தின் செயல்பாடுகள் குறித்தும், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு அவர்களின் எடை மற்றும் உயரம் கற்றல் திறன் ஆகியவைகள் குறித்தும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டப்பட்டு வரும் பயனாளி வீடு கட்டும் பணிகளையும், அயப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் 18 வகுப்பறை கட்டடத்திற்கான கட்டப்பட்ட கட்டுமான பணிகளையும் , ஆவடி மாநகராட்சி ஒட்டியுள்ள TNHB சாலையில் வெள்ள தடுப்புக்கான முன்னேற்பாடு பணிகளையும், லாசர் நகர் தோட்டக்கலை துறை சார்பில் பயனாளி மாடித் தோட்டம் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், சேக்காடு திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளையும், பாலவிநாயகர் தெருவில் நியாய விலை கடைக்கான கட்டட பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) பாலமுருகன், ஆவடி வட்டாட்சியர் காயத்ரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.