சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்குவதா.. சீமான் கண்டனம்!

Loading

வேளாண்மையை அழித்தொழிக்கும் வகையில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் இனி நுகர்வோர் கடன் மதிப்பெண் அடிப்படையில் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 26.05.2025 அன்று தமிழ்நாடு கூட்டுறவுத் துறை பதிவாளர் விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் பின்பற்றுகிற நடைமுறையின்படி, இனி கூட்டுறவு கடன் பெறும் விவசாயிகளின் சிபில் ஸ்கோர்மதிப்பெண் பார்த்து தகுதி உள்ளோருக்கு மட்டுமே இனி வேளாண் கடன் வழங்கிட வேண்டுமென உத்தரவைப் பிறப்பித்துள்ளது விவசாய பெருமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-கூட்டுறவு வங்கிகளில் நுகர்வோர் கடன் மதிப்பெண் அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு வன்மையான கண்டனத்துக்குரியது.

அமைச்சரின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டதா? அல்லது மத்திய பா.ஜ.க. அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவிட்டு, மறைமுகமாக நடைமுறைப்படுத்தும் திராவிட மாடல் தில்லுமுல்லுகளில் இதுவும் ஒன்றா?

இந்திய ரிசர்வ் வங்கியே மக்களுக்கு எதிரான தன்னுடைய புதிய நடைமுறையைத் திரும்ப பெற்றுவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு எதிரான இத்தகைய கடுமையான விதிமுறையை விதித்திருப்பது ஏன்?

வேளாண் கடன் பெற்ற விவசாயிகள் அக்கடனைத் திருப்பி செலுத்தும் கணக்கீடான சிபில் ஸ்கோர் மதிப்பெண்களின் அளவீடுதான் விவசாயிகள் கடன் பெறுவதற்கான தகுதியாகத் தீர்மானிக்கப்படும் என்றால் லட்சக்கணக்கான ஏழை, எளிய விவசாயிகள், இனி வேளாண் கடன் பெறவே முடியாது. இது வேளாண்மையை அழித்தொழித்து, விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேற்றுகின்ற கொடுஞ்செயலாகும்.

மற்ற தொழில்களைப் போல விவசாயம் என்பது மாதா மாதம் லாபம் ஈட்டும் தொழிலுமல்ல; ஐந்தாறு மாதங்கள் ஓய்வின்றி உழைத்து, இயற்கையும் துணை புரிந்தால் மட்டுமே வெள்ளாமை வீடு வந்து சேர்ந்து சிறிதளவாவது லாபம் கிடைக்கும்

அதிலும் கடன் வாங்கித்தான் வேளாண்மை செய்ய முடியும் என்ற அவலநிலையில் விவசாயிகளை வைத்துவிட்டு, அப்படி கடன் வழங்கவும் புதிய விதிமுறைகள் என்ற பெயரில் தி.மு.க. அரசு கட்டுப்பாடு விதிப்பது, இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் விவசாயிகளையும் வேளாண்மையையும் பாதுகாக்கும் முறையா?

ஆகவே, வேளாண்மையை அழித்தொழிக்கும் வகையில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் இனி நுகர்வோர் கடன் மதிப்பெண் அடிப்படையில் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

0Shares