திருப்பாச்சூரில் இலவச கண் பரிசோதனை முகாம்.. 4 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை!
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் செங்கல் தயார் செய்யும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு 4 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சூர் கிராமத்தில் உள்ள சக்தி செங்கல் சூளை வளாகத்தில் ராஜன் கண் பராமரிப்பு மருத்துவமனை, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி இணைந்து நடத்திய சிறப்பு இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமில் அப்பகுதியில் செங்கல் சூளை தொழிலாளர்கள் 80 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கண்புரை, கண்களில் சதை வளர்ச்சி, கிட்ட, தூரப்பார்வை சிக்கல், தலைவலி, கண்களில் நீர் வடிதல், கண் அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்தனர்.
இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்ட 4 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது. செங்கல் தயார் செய்யும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் நாள்தோறும் மண், தூசி காரணமாக ஏற்படும் கண் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.