மணமகன் தாடி வைத்திருந்தால் திருமணத்துக்கு வரமாட்டோம்..மீனவ கிராம மக்கள் நூதன அறிவிப்பு!
ஆண்டுதோறும் புதிய புதிய பேஷன்கள் உருவாகி வருகிறது.
உடைகளில் வரும் பேஷனை போல தலை முடி, தாடி வைப்பதிலும் பல ஸ்டைல்கள் உருவாகி உள்ளது. ஷிப்பி, டிஸ்கோ, முல்லட், பாக்ஸ், பங்க் என தலை முடியை இன்றைய இளைஞர்கள் அழகுபடுத்தி கொள்கின்றனர்.
இதேபோல் இளைஞர்களிடம், ‘தாடி’ வளர்ப்பது தனி மோகமாகி உருவாகி உள்ளது. தாடி வளர்ப்பதில் கே.ஜி.எப். கதாநாயகன் யாஷ் வைத்திருந்த புல் லாங் பியட், பிரெஞ்சு போர்க், கோட்டே, ஸ்டபுள் லாங், மீடியம் என பல வகைகள் உள்ளது. கடந்த காலங்களில் மணமகன் கிளீன் ஷேவ் செய்து இருப்பார். ஆனால் இப்போது திருமண கோலத்திலும் மணமகன் தாடி வைத்துள்ளார். இதுதான் இன்றைய பேஷனாக உள்ளது.
இந்த நிலையில் புதுவை மாநில காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவ கிராம மக்கள், ‘திருமணத்தின் போது மணமகன் தாடி வைத்திருந்தால் அந்த திருமண விழாவில் கிராம மக்கள் யாரும் கலந்து கொள்வதில்லை’ என, தடாலடியாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மணமகளுக்கு சம்மதம் இருந்தால் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். இதனை பலரும் ஏற்றுள்ளனர். ஆனாலும் தனி நபரின் விருப்பத்தில் தலையிடுவதா.? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. இது உள்ளூர் இளைஞர்களிடம் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.