உலக உழைப்பாளர் தினம் மக்கள் நலப் பேரவை வாழ்த்து
மே1 உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்
மே தினம் அல்லது தொழிலாளர் தினம் என்று அழைக்கப்படும் மே1 ஆம் தேதி, இந்த நாளின் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்க ஒரு கணம் ஒதுக்க விரும்பினேன். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதன் தோற்றத்திலிருந்து இன்று வரை தொழிலாளர்களின் உரிமைகள், ஒற்றுமை மற்றும் சமூகத்திற்கான பங்களிப்புகளின் தினமாக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைக் கொண்டாடும் நாளாகவும், உலகளவில் தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் வெற்றிகளைக் குறிக்கும் நாட்காட்டியில் ஒரு குறிப்பிடத்தக்க நாளாகவும், தொழிலாளர் இயக்கத்தின் சாதனைகளையும் தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான தொடர்ச்சியான போராட்டத்தையும் அங்கீகரிக்கும் நாளாகவும் மே1 திகழ்கிறது.
காரணம் மே தினம் மென்மையாக கிடைக்கப்பெற்ற தினம் அல்ல. மே தினத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அதில் தொழிலாளிகளின் உயிர் தியாகங்களும், போராட்டங்களும், ரத்தச் சுவடுகளும் அடங்கியிருக்கும்.
முதலாளி வர்க்கத்தினால் சுரண்டப்பட்டு வந்த தொழிலாளர்களின் 16 மணி நேர உழைப்பு சுரண்டலை எதிர்த்து, போராடி உயிர் நீத்த தொழிலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தோழர்களின் தியாகத்தால் பெற்ற 8 மணிநேர உழைப்பு, 8 மணிநேர ஓய்வு, 8 மணிநேர உறக்கம் என வெற்றி கண்ட நாளான மே தினத்தில் தொழிலாளர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நமது வீர வணக்கத்தை காணிக்கையாக்குவது பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்.
19 ஆம் நூற்றாண்டு; ஆரம்ப காலகட்டத்தில் தொழில்துறையில் வேகமாக வளர்ந்து வந்த வளர்ச்சி அடைந்த நாடுகளில், தொழிற்சாலைகளின் முதலாளிகள் தங்களின் வளர்ச்சியை மட்டும் கவனத்தில் கொண்டு, தொழிலாளர்களின் நலனில் சிறிதும் அக்கறை கொள்ளாமல், நாள் ஒன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் கட்டாய வேலை செய்ய வேண்டும் என்று நிர்பந்தித்து வந்தனர். அவர்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு தொழிலாளர்களை இயந்திரங்கள் போல் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இதனால் பெரும் மன உளைச்சல் மற்றும் உடல் நல பாதிப்பிற்குள்ளான தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளில் முதலாளி வர்க்கத்தின் உழைப்பு சுரண்டலை எதிர்த்து குரல் எழுப்ப தொடங்கினார்கள். இத்தருணத்தில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை முன்னெடுத்து செயல்படுத்துவதற்கு இங்கிலாந்தில் சாசன இயக்கம் துவக்கப்பட்டது. இச்சாசன இயக்கமானது ஆறு அம்ச முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியது. இவர்களின் கோரிக்கைகளின் முக்கியமானது வேலை நேரம் பத்து மணி வரை மட்டும் என்பதாகும்.
பிரான்ஸ் நாட்டில் 1830 இல் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன
அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உலகிலேயே முதன்முதலாக எட்டு மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் கட்டிட தொழிலாளிகள் போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர். இந்த வெற்றியானது தொழிலாளர் வர்க்க போராட்டத்தின் ஒரு மைல் கல்லாக அமைந்தது என்றால் மிகையாகாது.
தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டம் பல நாடுகளுக்கு பரவ தொடங்கியது. இதன் காரணமாக பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மே03, 1886 அன்று அமெரிக்காவின் சிக்காகோ நகரில் மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின்’ எனும் நிறுவனத்தைச் சார்ந்த 3000 மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் நான்கு தொழிலாளர்கள் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகினர். இச்சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே4 அன்று மாபெரும் கண்டனக் கூட்டம் ஒன்றைத் தொழிலாளர்கள் நடத்தினார்கள். நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தி தொழிலாளர்களை தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக ஜூன் 21, 1886 அன்று நீதிபதி கேரி அவர்கள் தொழிலாளர் தலைவர்கள் 7 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இந்த நிகழ்வானது ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது.
ஜூலை 14, 1889 அன்று பாரிசில் நடைபெற்ற சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்ற கூட்டத்தில் 18 நாடுகளை சேர்ந்த சுமார் 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டு காரல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்து செல்வது என்றும், மே முதல் நாளை சர்வதேச தொழிலாளர் தினமாக அனுசரிக்க வேண்டும் என்றும் தீர்மானித்தனர். இதுவே மே 1 உழைப்பாளர் தினமாக அனுசரிக்க வழி வகுத்தது.
இதை போல் 1895 – 1899 இடைப்பட்ட காலத்தில் ஜார் மன்னரின் ஆட்சி காலத்தில் ரஷ்ய தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டு அடிமைகள் போல் நடத்தப்படுவதை எதிர்த்து நூற்றுக்கணக்கான வேலை நிறுத்த போராட்டங்களை மேற்கொண்டனர்.
1896 ஆம் ஆணடு மே மாதம் லெனின் அவர்கள் தொழிலாளர்களின் நிலை, அடிப்படை உரிமை மற்றும் பொருளாதாரம் ஆகியவைகள் அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினர். தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மே1 உலக உழைப்பாளர் தினமானது இந்தியாவில் முதன்முதலில் நமது சென்னையில் கொண்டாடப்பட்டது என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ளக்கூடிய வரலாற்று சிறப்பு அம்சமாகும். சென்னை மாநகரில் 1923 ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் பொதுவுடமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம.சிங்காரவேலன் அவர்களின் தலைமையில் மே தினம் கொண்டாடப்பட்டது.
மே தினத்திற்காக தங்களின் இன்னுயிரை ஈன்று மற்றும் அடக்கு முறையைக் கண்டு அஞ்சாது போராடி உரிமையை பெற்றுக் கொடுத்த தொழிலாளர் தோழர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தி, தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூக நீதியின் முக்கியத்துவத்தை, நியாயமான சிகிச்சை, சம ஊதியம் மற்றும் பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்கிட உறுதிமொழியினை ஏற்பார்கள்.
இன்றளவும் தொடர்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள், முதலாளி வர்க்கத்தினரால் போதிய ஊதியமின்மை, நீண்ட நேர வேலை. சுரண்டல், சமத்துவமின்மை மற்றும் பாதுகாப்பற்ற வேலை என பல துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது நம் அனைவருக்கும் வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது. எனவே தொழிலாளர்களின் உழைப்பின் மதிப்பை அங்கீகரிப்பது மற்றும் மிகவும் நியாயமான மற்றும் சமமான சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் இத்தினத்தில் உறுதி ஏற்க வேண்டும்.
உலக உழைப்பாளர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையில், கல் உடைக்கும் தொழிலாளி முதல் கணினி பணியாளர் வரை அனைத்து தரப்பு தொழிலாளர்களின் உரிமைகளை ஆதரிப்பதிலும் சமூக நீதியை மேம்படுத்துவதிலும். ஒவ்வொரு தொழிலாளியும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படும் ஒரு உலகத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அமைப்புகளை ஆதரிப்பதன் மூலமும், உள்ளூர் தொழிலாளர் நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலமும், தொழிலாளர் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், அனைவருக்கும் மிகவும் நியாயமான மற்றும் சமத்துவமான சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்