இயற்கை சந்தை மூலம் அதிக லாபம்.. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள்!

Loading

சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை சந்தை அமைத்து பயன்பெற்று வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் மகளிரை உறுப்பினர்களாகக் கொண்டு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், இயற்கை சந்தை திட்டமானது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்கள் மூலம் இயற்கை முறையில் காய்கறிகள், பழ வகைகள், கீரைகள், தானிய வகைகள், பால், நெய், தேன், காளான் போன்றவைகளை நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்வதே, அத்திட்டத்தின் நோக்கமாகும்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களைச் சார்ந்த ஆர்வமுள்ள 40 சுய உதவிக்குழு மகளிர் விவசாயிகளை ஒன்றினைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி, சுய உதவிக்குழுவினைச் சார்ந்த உறுப்பினர்கள் விளைவித்த பொருட்களான கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், மிளகாய், பப்பாளி,வாழைப்பழம், எலுமிச்சைப்பழம், அவரைக்காய், பூசணிக்காய், தேங்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், அரைக்கீரை, தண்டுகீரை, வல்லாரைக்கீரை, முடக்கத்தான் கீரை, மாப்பிள்ளை சம்பா அரிசி, கருப்புக் கவுனி அரிசி, சிவப்புக் கவுனி, குள்ளக்கார், தூயமல்லி, கருப்பு உளுந்து ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான பிரதி வாரந்தோறும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தன்று விற்பனை செய்தவற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விற்பனையும் கடந்த 03.03.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்தி, பொருளாதாரம் ஈட்டி வரும்அரளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினரான திருமதி சீதா தெரிவிக்கையில்,

எனது பெயர் சீதா. நான் சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட அரளிக்கோட்டை கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் எனது கிராமப்பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளேன்.
நான் எனது வாழ்வாதாரத்திற்கென, எனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் மேற்கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயினை வைத்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வந்தேன்.அச்சமயம், நான் உறுப்பினராக இருந்த மகளிர் சுயஉதவிக்குழுவின் சார்பில், மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எவ்வாறாக பல்வேறு வகையான நெல் வகைகளை பயிரிட்டு, அதனை சந்தைப்படுத்தி விற்பனை செய்வது என்பது தொடர்பாக வழிகாட்டப்பட்டது. அவ்வழிகாட்டுதலின்படி, 12 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள திட்டமிட்டு, பல்வேறு தரப்பு நெல் வகைகளை பயிரிட்டேன்.இயற்கை முறையில் பயிரிடப்பட்ட நெல் ரகங்களில் நல்ல விளைச்சல் கிடைத்தது. அவ்வாறாக, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நெல் ரகங்களை பக்குவப்படுத்தி, அரிசி வகைகளாகவும், மாவு வகைகளாகவும் விற்பனை செய்வதற்கு மகளிர் திட்டத்தின் சார்பில் எனக்கு அறிவுரையும் வழங்கப்பட்டது.

மேலும், விளைவிக்கப்பட்ட நெல் ரகங்களை சென்னையில் சந்தைபடுத்துவதற்கென, மகளிர் திட்டத்தின் சார்பில் ஏற்பாடும் செய்து தரப்பட்டது. மேலும், அவ்வகையான நெல் ரகங்களை அரிசிகளாகவும், மாவு வகைகளாகவும் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தது.தற்போது உள்ள நவீன காலகட்டத்தில், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது. உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதாகவும் உள்ளது.

இதனை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனை செய்யவும் துறை ரீதியான அறிவுரைகள் பெறப்பட்டு, அதனடிப்படையில் பிரதி திங்கட்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தருகின்ற பொதுமக்கள், தங்களது உற்பத்தி பொருட்களை வாங்கி பயன்பெறுகின்ற வகையில், எங்களது மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் வாயிலாக காய்கறி உள்ளிட்ட பல்வேறு வகையான உற்பத்தி பொருட்களை தரமான முறையில், சரியான விலைக்கு விற்பனை செய்து அதன் மூலம் இலாபம் ஈட்டி பயன்பெற்று வருகின்றோம்.

இதுபோன்று, பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்குவதற்கு அடிப்படையான பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னைப் போன்ற மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என அரளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினரான திருமதி சீதா அவர்கள் தெரிவித்தார்.

இதேபோல மேற்கண்ட திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினரான திருமதி சாந்தி அவர்கள் தெரிவிக்கையில்,இதுபோன்று, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு மட்டுமன்றி, அவர்கள் தற்சார்பு நிலையினை அடைவதற்கு வழிவகை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்க்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

0Shares