ஆயுதப்படை பதவிகளுக்கான போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்..மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவிப்பு!
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தாலுகா மற்றும் ஆயுதப்படை பதவிகளுக்கான போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட அறிவுரை பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 04.04.2025 அன்று காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 1299-காலிப்பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு 26.04.2025 சனிக்கிழமை முதல் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் துவக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பானது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படுவதுடன் இலவச மாதிரித்தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.
கடந்த ஆண்டு இவ்வலுவலகம் வாயிலாக நடைபெற்ற கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்கள் தற்போது பல்வேறு அரசு துறைகளில் பணி நியமனம் பெற்றுள்ளனர். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 9626456509, 6381552624 என்ற கைபேசி எண்களை தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம்.
கட்டணமில்லா இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அடையாள அட்டை நகலுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அலுவலக நாட்களில் நேரில் வருகை புரிந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.