போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரம்..வாலிபரை சரமாரி தாக்கிய கும்பல்!
திருவள்ளூர் அருகே குடிபோதையில் தகராறு செய்தது குறித்து போலீசில் வாலிபர் புகார் கொடுத்ததால் அந்த வாலிபரை கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியது.மேலும் காயமடைந்த வாலிபர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் கண்டிகையை சேர்ந்தவர் பாலாஜி. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரகுபதி மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த வாரம் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து ரகுபதி மற்றும் நாகராஜ் கவியரசு உள்ளிட்டோரை பாலாஜி தட்டி கேட்டுள்ளார்.இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திலும் பாலாஜி புகார் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரகுபதி, கவியரசு, கே. சந்தோஷ், பாரதிதாசன், தனபால் ஆகியோரை புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணைக்காக அழைத்து விசாரித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று இரவு பாலாஜி சிறுவானூர் கண்டிகை பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு இன்னோவா காரில் வந்த கவியரசு, சந்தோஷ், பாரதிதாசன், தனபால் உள்ளிட்ட ஏழு பேர் பாலாஜியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பாலாஜி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
குடிபோதையில் தகராறில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் ஏழு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் போலீசில் கொடுத்த புகாரில் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.