கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் வேலை திட்ட பெண்கள்.. ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம்!

Loading

மேல் நல்லாத்தூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம் பறிபோனதால் பெண்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்னும் நூறு நாள் திட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும் கடந்த சில மாதங்களாக கூலியும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதிவாசிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்ப்பட்டனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் சாலையில் வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மட்டுமே இந்த வேலையில் ஈடுபட்டு வருவதால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.எனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக பணியினை எங்கள் ஊராட்சியில் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தினர்.

0Shares