ஓய்வூதியம் பெறும் விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் : தமிழ்நாடு நாடக நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் கோரிக்கை!
அனைத்து கிராம நாடக தெருக்கூத்து கலைஞர்கள் நலவாரியம் மூலம் பெறும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாத ஓய்வூதியம் பெறும் வகையில் அரசு விதிமுறைகளை எளிதாக்கவும் என தமிழ்நாடு அனைத்து கலைத்தாய் நாடக நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கானை என்.சத்தியராஜ் தெரிவித்தார்.
திருவள்ளூர் ராஜாஜி சாலையில் உள்ள கலைச்சங்க மைதானத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தெருக்கூத்து நாடக கலைஞர்கள், சிலம்பாட்டம், மோகினி ஆட்ட கலைஞர்கள் என 300- க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கே.வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் பங்கேற்று கிராமிய கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.இதில் தமிழ்நாடு அனைத்து கலைத்தாய் நாடக நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கானை என்.சத்தியராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
தமிழகம் முழுவதும் நாட்டுப்புற தெருக்கூத்து மற்றும் நாடக கலைஞர்கள் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் நாட்டுப்புற கலைகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும், தெருக்கூத்து நாடக கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நலவாரியம் மூலம் கல்வி உதவித் தொகை, திருமண நிதி உதவி, ஈமச்சடங்கு நிதி உதவி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.இதுபோன்ற உதவிகளை பெறுவதற்கு முறையாக பெற அரசு அலுவலகங்களை அணுக பயன்பெற வேண்டும். அதேபோல், மாத ஓய்வூதியம் பெற கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் மற்றும் கலைப்பாட்டுத்துறை அலுவலரை அணுக வேண்டியுள்ளது. எனவே இதில் உள்ள சிரமங்களை களைந்து எளிதாக்க வேண்டும்.
ஏற்கனவே ஆட்சியர் அலுவலகம் மூலம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்து அலைக்கழிக்காமல் நடவடிக்கை எடுத்தால் உண்மையான நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர்கள் பயன்பெறுவதற்கான வாய்ப்பாக அமையும். அதனால், அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், அரசு பேருந்துகளில் தெருக்கூத்து கலைஞர்களுக்கு பாதி கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்திய சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பம்பை, பறை இசை, பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.இதில் திருவள்ளூர் மாவட்ட நாடக நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரூபன், துணைத்தலைவர்கள் வினோதிதா, தனலட்சுமி, மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் சம்பத், சீனிவாசன், மாவட்ட பொருளாளர் பாபு, ரமேஷ், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.