தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது..விண்ணப்பிக்க கடைசி நாள்..திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Loading

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற ஏப்ரல் 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 03.09.2021 அன்று, 2021 – 2022 நிதி ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு முன்மாதிரியான பங்களிப்பு அளித்து தங்களை முழுமையாக அர்ப்பணித்த 100 தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்கப்படும் என அறிவித்தார்.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி,சுற்றுச்சூழல் விழிப்புணர்வு,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,பசுமை தயாரிப்புகள்,பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்,நிலைத்தகு வளர்ச்சி,திடக்கழிவு மேலாண்மை,நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு,காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை,காற்று மாசு குறைத்தல்,பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை,சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு,கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, இதர சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்கள் ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள்,கல்வி நிறுவனங்கள், பள்ளிகள்,கல்லுரிகள்,குடியிருப்போர்சங்கங்கள்,தனிநபர்கள்,உள்ளாட்சிஅமைப்புகள்,தொழிற்சாலைகள்,அரசு சாரா அமைப்புகளுக்கு 2024 – 2025 ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனிநபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இவ்விருதிற்கு www.tntiruvallurawards.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள் (கடித நகல்) மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும், இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்திலிருந்தும் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், திருவள்ளூர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கும்மிடிப்பூண்டி அவர்களை அணுகலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் கடைசி நாள் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.

0Shares