திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
நிதிக்குட்பட்டு சாத்தியமுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எந்த திட்டத்தையும் கட்சி பாகுபாடுடன் நிறைவேற்றுவதில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறைகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது.இந்தநிலையில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம் குறித்துமுதல்-அமைச்ச ர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “உங்கள் தொகுதி’ திட்டத்தின் கீழ் எங்கள் தொகுதி சார்ந்த 10 கோரிக்கைகள் கேட்கப்பட்டன; ஆனால் பெரும்பாலான திட்டங்களை, சாத்தியமில்லை எனக்கூறி நிராகரிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 மாதங்களுக்கு ஒருமுறை நானே தலைமை தாங்கி இத்திட்டத்தை ஆய்வு செய்கிறேன். நிதிக்குட்பட்டு சாத்தியமுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எந்த திட்டத்தையும் கட்சி பாகுபாடுடன் நிறைவேற்றுவதில்லை என்று கூறினார்.
இதனை தொடர்ந்து திருச்சியில் ரூ.290 கோடி செலவில், அமைய உள்ள மாபெரும் நூலகத்திற்கு, கல்வி கண் திறந்த’பெருந்தலைவர் காமராஜர்’ பெயர் சூட்டப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார்.