சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்கும் ஒரே இயக்கம் அதிமுக தான்..அன்பழகன் பேச்சு!

Loading

சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்கும் ஒரே இயக்கம் அதிமுக தான் என்பதை சிறுபான்மை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநில கழக செயலாளர் அன்பழகன் கூறினார்.

அதிமுக சார்பில் ஆங்காங்கே நீர், மோர் பந்தல் திறக்கபட்டுவருகிறது.அந்த வகையில் புதுச்சேரி அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கபட்டது.அப்போது நீர் மோர் பந்தலை திறந்துவைத்து பேசிய புதுச்சேரி அதிமுக மாநில கழக செயலாளர் அன்பழகன் கூறியதாவது:கோடை வெயிலின் தாக்கம் மக்களை அதிகமாக பாதிக்கின்ற விதத்தில் இருப்பதால் மக்களுடைய தாகத்தை தணிக்கின்ற விதத்தில் அதிமுக சார்பில் ஆங்காங்கே நீர், மோர் பந்தல் திறக்க ஆணையிட்டனர்.

கழக பொதுச்செயலாளருடைய ஆணையை ஏற்று இன்றைய தினம் தலைமை கழகத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இந்த மோர் பந்தல் கோடை வெயில் முடியும் காலம் வரை தினசரி திறந்திருக்கும். அதேபோன்று வெயிலின் தாக்கத்தை குறைக்கின்ற விதத்தில் மோர், இளநீர், தர்பூசணி, கிர்ணி பழம், நுங்கு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும். அதேபோன்று நாளை தினத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் அரியாங்குப்பம், முதலியார்பேட்டை, ராஜ்பவன், லாஸ்பேட்டை, காமராஜர் நகர், வில்லியனூர் உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக சார்பில் புதிதாக மோர் பந்தல் திறந்து மக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கப்படும்.

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 6 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள திமுக பல்வேறு முக்கியமான பிரச்சனைகளில் வாய் மூடி மவுனம் காத்து ஆளும் அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தனர். குறிப்பாக தனியார் மருத்துவ கல்லூரி அரசு இட ஒதுக்கீட்டில் தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவுபடி 50% இடங்களை பெற அரசை வலியுறுத்தாமல் மவுனம் காத்தனர்.

அதே போன்று 1954-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வக்பு சட்டத்தில் இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக 40-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் வக்பு வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இஸ்லாமியருக்கு எதிரான திருத்தங்களை திரும்ப பெற அதிமுக சார்பில் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடியாரின் கோரிக்கையை ஏற்று தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தமட்டில் உப்பளம், வில்லியனூர் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் கனிசமான இஸ்லாமிய சமுதாய மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் கண்மூடித்தனமான வாக்குகளை பெற்று இவ்விரண்டு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில் திமுக அமைப்பாளரும், உப்பளத்தில் திமுக துணை அமைப்பாளரும் வெற்றி பெற்றனர்.

திமுக ஆட்சி நடத்தும் தமிழகத்தில் அதிமுகவின் கோரிக்கையை ஏற்று வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில் புதுச்சேரியில் அதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற திமுக வாய்மூடி மவுனம் காத்தனர். இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினால் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்ததாக அரசு நினைத்துவிடும் என மவுனம் காத்தனர். இது சிறுபான்மை மக்களை ஏமாற்றும் செயலாகும். தேர்தல் நேரத்தில் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றிபெற்ற பிறகு சிறுபான்மை மக்களுக்கு எதிராக திமுக செயல்படுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது.

திமுகவை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சிறுபான்மை மக்கள் இதை உணர வேண்டும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்கும் ஒரே இயக்கம் அதிமுக தான் என்பதை சிறுபான்மை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என பேசினார்.

0Shares