வளர்ச்சியடைந்த இந்தியா இளையோர் நாடாளுமன்றம் 2025
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் இளையோர் நாடாளுமன்ற போட்டிகள்
வளர்ச்சியடைந்த இந்தியா இளையோர் நாடாளுமன்றம் 2025 எனும் மாபெரும் நிகழ்வை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, 18 முதல் 25 வயது வரை உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நடத்துகிறது. இதற்கான பதிவு 2025 மார்ச் 16-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான போட்டி, சென்னை லயோலா கல்லூரியில் இன்று மார்ச் 22 தொடங்கி நாளை மார்ச் 23 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில், மைபாரத் நேரு யுவ கேந்திரா மாநில இயக்குனர் திரு எஸ்.செந்தில்குமார் அவர்கள் கூறியதாவது; மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் தேசிய இளையோர் நாடாளுமன்ற திருவிழாவை நடத்தி வருகிறது. இந்த வருடம் தேசிய இளையோர் பாராளுமன்ற திருவிழாவை வளர்ச்சியடைந்த பாரத இளையோர் நாடளுமன்றம் என்ற பெயரில் 2047-இல் வளர்ச்சியடைந்த பாரதமாக நமது நாடு உருவாக இருப்பதை கருப்பொருளாகக் கொண்டு கொண்டாடப்படுக்கிறது. இப்பெயர் மாற்றம் மட்டுமல்லாமல் கடந்த நான்கு இளையோர் திருவிழாவில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர் மட்டுமே நாடாளுமன்றத்தில் உரையாட முடியும். இரண்டாம் மூன்றாம் இடம் பெற்ற நபர்கள் கலந்து கொள்ள மட்டுமே முடியும். இப்பொழுது மாநில அளவில் இங்கிருந்து செல்லும் மூன்று நபர்களும் அங்கு நடக்கும் வெவ்வேறு உரையாடல்களில் பங்குகொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டின் இளையோர்களின் வேறுபட்ட கருத்தையும் ஆக்கபூர்மான அறிவாற்றலையும் கொண்டு சேர்க்கவே இந்நிகழ்வு நடத்தபடுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய தேசிய நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநரகத்தின் தமிழ்நாடு மாநில இயக்குநர் சாம் செல்லையா, நாட்டின் வளர்ச்சிப்பாதையில் இளைஞர்கள் தங்களுடைய பங்களிப்பை கொடுப்பதற்கும், தங்களின் தொலைநோக்குப்பார்வையை பகிர்ந்துகொள்வதற்கும் ஒரு சிறப்பான தலமாகும் என்றார்.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வெற்றியாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநில அளவிலான போட்டி சென்னை லயோலா கல்லூரியில் மார்ச் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர்கள், 2025 ஏப்ரல் 1 மற்றும் 2-ம் தேதிகளில் புதுதில்லியில் நடைபெறும் வளர்ச்சியடைந்த பாரத இளையோர் நாடாளுமன்ற தேசிய சுற்றில் பங்கேற்பார்கள்..