பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்..மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்!

Loading

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் லஞ்ச பணத்துடன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்திஉள்ளது.

இது குறித்து புதுச்சேரி மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன் விடுத்துள்ள அறிக்கை.புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் திரு. தீனதயாளன் மற்றும் அவருடன் சில அதிகாரிகள் இன்று லஞ்சப் பணத்துடன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ஒப்பந்ததாரர் நிறுவனத்திற்கு டெண்டர் விடுவதில் கையூட்டு கேட்டதாகவும், காரைக்கால் அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டதாகவும் சிபிஐ அதிகாரிகள் கைப்பேசி உரையாடலை ஆய்வு செய்து ரூ.25 லட்சம் பணத்துடன் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். தலைமை பொறியாளர் திரு. தீனதயாளன் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது புதுச்சேரி அரசியலில் மட்டும் இன்றி உயர் அதிகாரிகள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை மற்ற துறைகளை விட லஞ்ச லாவண்யத்தில் மிகப்பெரும் அளவில் ஊழல் நடைபெற்று வருவது தலைமை பொறியாளர் கைது நிகழ்விலிருந்து மக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தலைமை அதிகாரி உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தார்மீக பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. லட்சுமி நாராயணன் தானே முன்வந்து கௌரவமாக பதவி விலக வேண்டும் என மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்துகிறது.

மேலும் புதுச்சேரி அரசு துறைகள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் பெரும் காரணமாக இருந்த போதும் ஆளும் அரசும் ஆட்சியாளர்களும் இதில் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இருக்கிறது. புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறியுள்ளது சிபிஐ வழக்கிலிருந்து தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் அமைச்சர்களை காட்டிலும் முதல் நிலை இரண்டாம் நிலை அதிகாரிகள் பெருமளவில் ஊழல் செய்து வருவாய்க்கு அதிகமாக லஞ்சப் பணத்தை ஈட்டி சொத்துக்களை சட்டவிரோதமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சொத்துக்கள் வாங்கி குவிப்பதை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

குறிப்பாக புதுச்சேரி அரசு துறைகளின் முதல் நிலை அதிகாரிகள் அனைவரும் அவர்களது சொத்துக்கணக்கை இணையத்தில் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தன்மையுடன் வெளியிட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற டென்டர்கள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைக்க தவறிய அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்திட வேண்டும் என எமது இயக்கம் வலியுறுத்துகிறது என புதுச்சேரி மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0Shares