ஐ.பி.எல்.: சாதனை படைத்த விராட் கோலி!
நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
18-வது ஐ.பி.எல். தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மே 25-ந் தேதி வரை 13 இடங்களில் அரங்கேறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.
கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 56 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் குருணல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 59 ரன்களும், பில் சால்ட் 56 ரன்களும் அடித்தனர். பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் குருனால் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
முன்னதாக விராட் கோலி இந்த ஆட்டத்தில் 38 ரன்கள் அடித்தபோது கொல்கத்தாவுக்கு எதிராக 1000 ரன்களை கடந்தார். இவர் ஏற்கனவே சென்னை, டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு எதிராகவும் 1000 ரன்கள் அடித்துள்ளார்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறிப்பிட்ட 4 அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். வேறு எந்த ஒரு வீரரும் குறிப்பிட்ட 2 அணிகளுக்கு மேல் எதிராக 1000 ரன்கள் அடிக்கவில்லை.
அந்த பட்டியல்:
1. விராட் கோலி – 4 அணிகள் (சென்னை, டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா)
2. டேவிட் வார்னர் – 2 அணிகள் (கொல்கத்தா, பஞ்சாப்)
2. ரோகித் சர்மா – 2 அணிகள் (கொல்கத்தா, டெல்லி)
3. ஷிகர் தவான் – ஒரு அணி (சென்னை)