கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முன்னேற்றங்கள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு
தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தில் கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முன்னேற்றங்கள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு
சென்னையிலுள்ள தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தில் ’கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முன்னேற்றங்கள்’ எனும் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கை நித்தி ஆயோக் உறுப்பினரும் பாதுகாப்புத் துறையில் தலைசிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் விஜய் குமார் சரஸ்வத் இன்று (17.03.2025) தொடங்கிவைத்தார்.
மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தில் இன்று தொடங்கி நாளை (மார்ச் 18) வரை நடைபெறும் இந்த சர்வதேச கருத்தரங்கில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்தும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கைவகுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.
தொழில்நுட்ப பரிமாற்ற முறையில் தயாரிக்கப்பட்ட கடல் நீரில் எரியும் லாந்தன் விளக்குகள் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் நிர்வாகத்தினருக்கும் கடலில் கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதக்கும் வழிகாட்டி அமைப்பை (மிதக்கும் கலன்) காமராஜர் துறைமுகத்துக்கும் திரு வி கே சரஸ்வத் வழங்கினார். ரோஷினி என்ற இந்த கடல் நீரில் எரியும் லாந்தன் விளக்கு சென்னை தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானி முனைவர் பூர்ணிமா ஜலிகல் அவர்களின் கண்டுபிடிப்பாகும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய நித்தி ஆயோக் உறுப்பினர் திரு வி கே சரஸ்வத், இந்தியா, 7,500 கிலோமீட்டருக்கும் அதிக நீளமுள்ள கடற்கரையை கொண்டுள்ளது என்றும் சிறப்புநிலை பொருளாதார மண்டலம் 2.02 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது என்றும் இவை நாட்டின் நீலப்பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுவதாகவும் தெரிவித்தார். இந்தியா, கடலோர காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்து வருவதாகவும், வருங்காலத்தில் மிதக்கும் சோலார் (சூரியஒளி) மின்னாற்றல் தயாரிப்பு, கடலலைகள் மூலம் மின் உற்பத்தி ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தவையாக திகழும் என்றும் கார்பன் உமிழ்வு மிகவும் குறைவாக இருக்குமென்றும் இத்துறையில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றும் அவர் கூறினார். 2023-2032 காலகட்டத்தில் இத்துறை 22.8% வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா 12.4 கிகா வாட் கடலலை மின்னுற்பத்தியுடன் சேர்த்து 54 கிகா வாட் பெருங்கடல் மின் உற்பத்தி செய்யும் திறனுள்ளது என்றும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் கருத்தரங்க மலரையும் அவர் வெளியிட்டார்.
துவக்க விழா நிகழ்ச்சியில் தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் பாலாஜி ராமகிருஷ்ணன் மற்றும் ஆற்றல் & நன்னீர் துறைத்தலைவர் முனைவர் பூர்ணிமா ஜலிகல், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இன்று காலை, கடல்சார் ஆற்றல் குறித்த பார்வை என்ற தலைப்பில், ஆழ்கடல் மற்றும் நீலப் பொருளாதாரத்தில் தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்ப கழகத்தின் பங்கு, இந்தியா மற்றும் உலகளவில் கடல்சார் ஆற்றலின் முக்கியத்துவம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கைகள், திட்டங்கள், சாதனைகள், சவால்கள், உலகளவில் கடல்சார் ஆற்றல் முறைகள் ஆகிய கருப்பொருள்களில் கருத்தரங்கு அமர்வுகள் நடைபெற்றன.
பிற்பகலில், அலைகள், காற்று ஆகியவற்றின் மூலமான மின் உற்பத்தி என்ற தலைப்பில், இந்தியாவில் அலைகள் மூலம் மின்சக்தி உற்பத்தி வாய்ப்புகளும், சவால்களும், இந்தியாவில் கடல்சார் எரிசக்தியின் முன்னேற்றம், இந்தியாவில் கடலோர காற்றாலை மின்உற்பத்தி, கடலோரப்பகுதிகளில் நிலைத்தன்மையையும், நீலப்பொருளாதார வளர்ச்சியையும் நோக்கிய கடல்சார் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி கடலோரப்பகுதிகளில் அலைகள் மூலமான மின் உற்பத்தியில் மாறுபாடு ஆகிய கருப்பொருள்களில் கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றன.
நாளை (18.03.2025), கடல் வெப்ப ஆற்றல் என்ற தலைப்பில் கடல்சார் அனல்மின் உற்பத்தியின் முக்கியத்துவம், கடல்சார் மின் உற்பத்தியை அடிப்படையாக கொண்ட உப்பு நீர் சுத்திகரிப்பு முயற்சிகள், ஜப்பானில் உப்புநீர் சுத்திகரிப்பில் நவீன மேம்பாடு ஆகிய கருப்பொருள்களில் விவாத அமர்வுகள் நடைபெறவுள்ளன.
அதைத் தொடர்ந்து தரநிலைப்படுத்துதலும், வணிகமயமாக்கலும் என்ற தலைப்பில் தரப்படுத்துதலில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் பங்கு, ஆய்வகங்கள் முதல், சந்தை வரையிலான தொழில்நுட்ப வணிகமயமாக்கல் உத்திகள், கடல்சார் தொழில்துறையின் சர்வதேச தரநிலைகள் ஆகிய கருப்பொருள்களில் விவாத அமர்வுகள் இடம் பெறுகின்றன.
நிறைவாக நாளை நவீன முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் கடலோர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பில் மிதவை பொறியியல் தொழில்நுட்பம், அலைகள் மூலமான மின் உற்பத்தியில் பாரம்பரிய முறைக்கு மாற்று ஆகிய கருப்பொருள்களில் கருத்தரங்க அமர்வுகளும், பின்னர் குழு விவாதமும் நடைபெறவுள்ளன.