ஒரு வாரத்துக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு!
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டும் வெயிலின் தாக்கமும் ,கோடை மழையும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.தென்மாவட்டங்களில் அவ்வபோது கோடை மழை பெய்தாலும் தற்போது வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. சென்னையை பொறுத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்தே வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது.இப்போதே இப்படி என்றால், மே மாதத்தில் நம்முடைய நிலைமை என்ன? என பேசும் அளவுக்கு இருக்கிறது.
அக்கினி நட்சதிரம் தொடங்குவதற்கு முன்பாகவே இப்படி வெப்பம் அதிகரித்தால் மக்கள் என்னதான் செய்வது.வெயில் ஒருபுறம் இருக்க சாலைகளில் ஆங்காங்கே சிறு சிறு பழக்கடைகளும்,ஜூஸ் கடைகளும் முளைத்துள்ளன.மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ள இந்த ஜூஸ் கடைகள் சற்று ஆறுதல் தரும் என்று சொல்லலாம்.இதனால் சிறு வியாபாரிகளுக்கு வியாபாரமும் களைகட்டும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வெப்பம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் இன்று திங்கட்கிழமை முதல் வருகிற 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு வாரத்துக்கு அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் இந்த வெப்பத்தின் தாக்கத்தை அதிகமாக உணர முடியும் என்றும் கூறுகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், இந்த நாட்களில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது திருப்பத்தூர், ஈரோடு, கரூர், விருதுநகர், மதுரை, வேலூர் உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களில் பதிவாகக்கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.