இன்று குழந்தை கவிஞர் வள்ளியப்பா நினைவு தினம்!
குழந்தைகளுக்கான கவிதைகள் படைத்து தமிழ் மழலைகளின் மனதில் நீங்கா இடம் பெற்ற “குழந்தை கவிஞர்” திரு.அழ.வள்ளியப்பா அவர்கள் நினைவு தினம்!.
அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922 – மார்ச் 16, 1989) புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரம் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் அழகப்ப செட்டியார் – உமையாள் ஆச்சி. இவர் குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.
அழ. வள்ளியப்பா தன் 13-ஆவது வயது முதல் கவிதை எழுதத் தொடங்கினார். இதழாசிரியராக தனது இலக்கிய வாழ்வை தொடங்கினார். பாலர் மலர், டமாரம், சங்கு ஆகிய இதழ்களுக்கு கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஓய்வு பெற்ற பின் 1983 முதல் 1987 வரை, கல்கி வெளியீடான கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராக இருந்தார்.
அழ. வள்ளியப்பா 1950-ல் குழந்தை எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். 1950 முதல் 1955 வரை பொதுச்செயலாளராக இருந்தர். 1956 முதல் 61 வரை தலைவராகவும் 1962 முதல் 1967 வரை ஆலோசகராகவும் 1968 முதல் 1989 வரை தலைவராகவும் பணியாற்றினார். சென்னை, காரைக்குடி மற்றும் கோவையிலும் குழந்தை எழுத்தாளர் மாநாடுகளை நடத்தியவர்.
தமிழ் இலக்கியத்தின் உன்னதங்களை சுவை குன்றாது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த, எழுத்தாளர் திரு.அ.கி.இராமானுசன் அவர்கள் பிறந்ததினம்!.
அ. கி. இராமானுசன் (A. K. Ramanujan, ஏ. கே. ராமானுஜன், மார்ச் 16, 1929 – சூலை 13, 1993) ஒரு இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளையும் ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ளார், மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.
இவர் தமிழ் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழை நிலைப்படுத்துவதற்கு முயற்சி செய்தவர். சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் பெயர்த்த பெருமைக்குரியவர்.