ஊர்க்காவல் படை தேர்வில் வெற்றி பெற்ற பலர் வேலை இழக்கும் அபாயம்..தீர்வு காண மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

Loading

ஊர்க்காவல் படை தேர்வில் பயிற்சியில் உள்ள பலருக்கு வேலை போகும் அபாயம் ஏற்படும் என்றும் அரசு பணி நியமன தேர்வு கட்டுப்பாட்டு குழு செய்த தவறுக்கு தண்டனை பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கா?? தொடரும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி முதல்வர், உள்துறை அமைச்சர்,ஆகியோருக்கு கோரிக்கைவிடுத்துள்ள புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் தெரிவிக்கையில்:

புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட நாட்களாக பணி நியமனமே இல்லாத சூழலில் தங்களின் முயற்சியால் பல்வேறு பணிநிய மனங்கள் நடந்து வருகிறது, இதற்கு தங்களது அரசுக்கும் தங்களுக்கும் நான் சார்ந்த அமைப்பின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே வேளையில் பணி நியமனங்களில் தவறுகள் இல்லாமல் நடக்க வேண்டும் என்ற கோரிக்கையை எமது அமைப்பு தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது. இதனை அரசியல் ரீதியாக எதிர்ப்பாக கருத வேண்டாம் என்ற கோரிக்கையை முதலில் வைத்துக் கொள்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த ஊர்க்காவல் படை தேர்வு, எழுத்துத் தேர்வில் முறைகேடு நடந்ததை எமது அமைப்பு அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தது. அறிவிக்கப்பட்ட பணி நியமன அறிவிப்பாணையில் உள்ளது போல கேள்வித்தாள்கள் கேட்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை எமது அமைப்பு முன் வைத்தது. ஆங்கிலம் மட்டுமன்றி அனைத்து பாடப்பிரிவுகளுடன் கேள்வித்தாள் குளறுபடியை அரசு பணி நியமன குழு செய்ததை எமது அமைப்பு தேர்வு முடிந்த அன்றே வெளிக்கொண்டு வந்தோம், ஆனால் எங்களது குற்றச்சாட்டுகளை அரசு செவி மடிக்காத காரணத்தினால்

உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். இந்த வழக்கினை விசாரித்த எட்டு நீதியரசர்களும் ஒருமித்த கருத்தாக தேர்வு கேள்வி தாளில் முறைகேடு நடந்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

இத்தகைய சூழலில் இவ்வழக்கினை இறுதியாக விசாரித்த நீதியரசர்கள் சுப்ரமணியம் மற்றும் அருள் முருகன் அவர்கள் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளனர், இத்தீர்ப்பில் எமது அமைப்பு தேர்வு வெளியான அன்று கேட்ட கோரிக்கையை இன்று நீதி அரசர்கள் தீர்ப்பாக வழங்கியுள்ளனர். குறிப்பாக தவறான பதினைந்து கேள்விகளுக்கான மதிப்பெண்களை ரத்து செய்து தேர்வு எழுதிய 4200 பேருக்கும் 15 மதிப்பெண் அளித்து தேர்வாளர்களை தேர்வு செய்ய வேண்டுமென கோரிக்கை நீதி வழங்கப்பட்டுள்ளது. இதனை அரசு வழக்கறிஞர்கள் கேட்டு பெற்றது வேடிக்கையின் உச்சம் என எமது அமைப்பு கருதுகிறது.

இத்தகைய முடிவினை எமது அமைப்பு தேர்வு முடிவுகள் வெளியான அன்றே கேட்டபோது செய்திருந்தால் அதனை வரவேற்று இருப்போம் ,ஆனால் வழக்கத்திற்கு மாறாக நான்கு மாதங்களுக்கும் மேலாக பயிற்சி எடுத்து வரும் தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் பலர் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதனை அறிந்தும் இத்தீர்ப்புக்கு சம்மதம் தெரிவித்தது எந்த விதத்தில் சரி என்ற கேள்வியை எமது அமைப்பு முன் வைக்கிறது.

அரசாங்கத்தை நம்பி பணியமர்த்தப்பட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் பாதிப்படைவது நியாயமா என்ற கேள்வியையும் எமது அமைப்பு முன் வைக்கிறது. தவறிழைத்த அரசு அதிகாரிகளுக்கு கிடைக்காத தண்டனை ,அரசால் தேர்வு செய்யப்பட்டோம் என்ற நம்பிக்கையுடன் பணி செய்து வரும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மட்டும் தண்டனை அளிப்பது எந்த விதத்தில் சரி என்ற கேள்வியையும் எமது அமைப்பு முன் வைக்கிறது.

எனவே மாண்புமிகு முதல்வர் மற்றும் மாண்புமிகு துறை அமைச்சர் அவர்கள் இவ்விவகாரத்தில் தலையிட்டு இப்பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம். பயிற்சி முடித்த ஊர்க்காவல் படை வீரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் காலிப் பணியிடங்களில் வழக்காடிகளுக்கு சிறப்பு சலுகை அடிப்படையில் பணி வழங்கி இப்பிரச்சனைக்கு இறுதி தீர்வு கண்டால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இதனை அரசு உள்நோக்கத்துடன் பார்க்காமல் புதுச்சேரி மாநில இளைஞர்கள் என்ற அடிப்படையில் தங்களின் பிள்ளைகளாக பாவித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

0Shares