கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடருமா? ..ஈஸ்வரன் பரபரப்பு பேட்டி!
கோவை:
2026-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க கூட்டணியில் தான் தொடரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈ.ஆர்.ஈஸ்வரன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டி பேசினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.அதுமட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடருமா? அல்லது கூட்டணி மாறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.இந்த நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-2026-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க கூட்டணியில் தான் தொடரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை என கூறினார் . மேலும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது என்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய ஈஸ்வரன்,சமீபத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நான் பாராட்டி பேசியதை வைத்து, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இணைகிறதா? என்று கேட்பது தவறு என்றும் நாங்கள் நிச்சயமாக தி.மு.க. கூட்டணியில் தான் தொடர்கிறோம். தொடர்வோம் என கூறினார்.
மேலும் அண்மைக்காலமாக அ.தி.மு.க.வில் நடந்து வரும் பிரச்சனை குறித்து என்னிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு நான், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இப்போது உள்ள சூழ்நிலையில் அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்தி வருகிறார் என்றும் இந்தச் சூழ்நிலையில் புதியதாக அ.தி.மு.க.விற்கு வேறு யாரையாவது நியமிப்பது நன்றாக இருக்காது என்ற ஒரு பொதுவான கருத்தை தான் நான் தெரிவித்தேன் என்றும் அவ்வளவு தான். அதில் வேறு ஒன்றுமில்லை என்றும் அந்த கருத்தை வைத்து, அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று பேசுவது சரியல்ல என கூறினார்.
மேலும் எங்களைப் பொறுத்தவரை நாங்கள் கட்சி வளர்ச்சி பணிகள், மக்கள் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறோம் என்றும் இன்று நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்றும் .அத்திக்கடவு-அவிநாசி திட்ட பணிகளை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதை தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார். இதற்காக ஏற்கனவே நன்றி தெரிவித்து இருக்கிறோம் என பேசினார்.
மேலும் அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான நீர் காளிங்கராயன் மலையிலிருந்து தான் வருகிறது என்றும் எனவே இந்த திட்டத்திற்கு காலிங்கராயன்-அத்திக்கடவு அவிநாசி திட்டம் என பெயர் சூட்ட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.