கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் ரெயில்கள்: ரெயில்வே மந்திரி அறிவிப்பு!
டெல்லி ரெயில் நிலையம் தேசிய பேரிடர் மீட்பு படை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் திடீர் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன என ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
பிரயாக்ராஜில் நடக்கும் கும்ப மேளாவில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் சென்று வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி புதுடெல்லி ரெயில்நிலையத்தில் அலைமோதிய அளவுக்கதிகமான கூட்டத்தால் 18 பேர் பலியாகி விட்டனர். இந்த சம்பவம் காரணமாக புதுடெல்லி ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “டெல்லி ரெயில் நிலையம் தேசிய பேரிடர் மீட்பு படை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் கூடுதல் பாதுகாப்புக்காக ரெயில்வே பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர் என கூறினார். மேலும் திடீர் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன என்றும் புதுடெல்லி, பாட்னா, சூரத், பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட 60 ரெயில் நிலையங்கள் அதிக மக்கள் கூடும் ரெயில் நிலையங்களாக கண்டறியப்பட்டுள்ளன. எனவே, தாங்கள் பயணிக்கும் ரெயில் புறப்படும் நேரத்தையொட்டி பயணிகளை நடைமேடைக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இதன்மூலம் ஒரே நேரத்தில் அதிக பயணிகள் நடைமேடைகளில் கூடுவதை தவிர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரயாக்ராஜ் ரெயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு கூட்ட நெரிசலை தடுப்பது எளிதாகி உள்ளது என்றும்
அதேபோல் ரெயில் நிலைய நடைமேம்பாலங்களில் உள்ள படிகட்டுகளில் அமருவதை தடுக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும் இதனால் வருங்காலத்தில் புது டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்டதைபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க முடியும் என ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
புதுடெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தற்போது வரை எந்தவொரு அதிகாரியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இரு நபர் குழுவின் அறிக்கைக்கு பிறகே அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்” என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.